கொரோனா தொற்றுக்குப் பிறகு சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் தைப்பூசத் திருவிழாவில் தமிழர்கள் ஆரவாரத்துடன் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொற்றுநோய் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூ வாழ் தமிழர்கள் தங்களின் வருடாந்திர இந்து பண்டிகையான தைப்பூசத்தை ஆடம்பரமாகவும் ஆரவாரமாகவும் கொண்டாடினர்.
இங்குள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் 35,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தமிழ் கடவுளான முருகப்பெருமானைப் போற்றும் இந்த திருவிழாவில், முருக பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி, காவடி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை பல்வேறு விதமாகச் செலுத்தினர்.
தமிழர்களின் இந்த முக்கிய நிகழ்வில், சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களின் வாழ்க்கை இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இது உண்மையில் எங்களுக்கு ஒரு வகையான வெற்றியாகும்” என்று அமைச்சர் கூறினார்.
தைப்பூசம் பற்றி அவர் கூறுகையில், ”இந்த திருவிழா உண்மையில் நாம் யார் என்பதற்கு ஒரு அற்புதமான அறிகுறியாகும். கலாச்சாரம், மதங்கள் கடந்து ஒருவருக்கொருவர் மரியாதை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வாகும் ” என்று அமைச்சர் டான் தெரிவித்தார்.







