ஒரு நாள் போட்டி; இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்கதேசம்

இந்தியா-வங்கதேசத்துக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வங்கதேசம் தொடரை கைப்பற்றியது.  வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில்…

இந்தியா-வங்கதேசத்துக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வங்கதேசம் தொடரை கைப்பற்றியது. 

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது தொடக்க வீரர்களாக அனமுல் ஹக், லிட்டன் தாஸ் களமிறங்கினர்.

தொடக்கத்தில் அனமுல் ஹக் 11 ரன்களிலும் , லிட்டன் தாஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 21 ரன்களிலும், ஷாகிப் அல் ஹசன் 8 ரன்களிலும், வெளியேறினர். இதனால் வங்காளதேச அணி தடுமாறியது. அடுத்து களமிறங்கிய மகமதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

சிறப்பாக விளையாடிய மகமதுல்லா அரைசதம் அடித்து 77 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிலைத்து ஆடிய மெஹிதி ஹசன் மிராஸ் சதமடித்து அசத்தினார். இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு வங்காளதேச அணி 271 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா சார்பில் வாஷிங்க்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், சிராஜ், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடக்க வீரரான ரோகித் சர்மா காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதனால் ஷிகர் தவான், விராட் கோலி களமிறங்கினர். தொடக்கத்தில் விராட் கோலி 5 ரன்கள், தவான் 8 ரன்களுக்கும் வெளியேறினர். இதன் பின்னர் சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அக்சர் படேல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். ஷ்ரேயஸ் அய்யர் 82 ரன்களுக்கும், அக்சர் படேல் 56 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் காயத்துடன் ரோகித் சர்மா களமிறங்கினார். அவர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்த அவர் அரைசதம் கடந்தார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை முஸ்தபிசுர் ரகுமான் வீசினார் ஆனால் 14 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என வங்காளதேசம் வென்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.