மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தடைவிதிக்க வேண்டும் என்ற சிவசேனா தரப்பு கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் உத்தவ்தாக்ரே தலைமையிலான சிவசேனா அரசுக்கு நெருக்கடி அதிகாரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனாவில் மொத்தம் உள்ள 55 எம்.எல்.ஏக்களில் 39 எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக அணி திரண்டுள்ளளனர். இந்நிலையில் உத்தவ் தாக்ரோ தனது பெரும்பான்மையை நிரூபிக்க நாளை மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்குகோர வேண்டும் என அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அவரது உத்தரவை எதிர்த்து சிவசேனா தலைமைக் கொறாடா சுனில் பிரபு தாக்கல் செய்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் சூர்ய கந்த், பர்திவாலா அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது, அப்போது கீழ்க்கண்டவாறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
1) பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வெறும் ஒரே ஒரு நாள்தான் கால அவகாசம் வழங்குகிறார். அதுவும் எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்த உடன் இந்த அறிவிப்பு வெளியாகிறது.
2) சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் வெளிநாட்டில் உள்ளார் இப்படி பல சிக்கல் உள்ள நிலையில் எப்படி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முடியும்
3) நம்பிக்கை வாக்கெடுப்பில் யார் வாக்களிக்க முடியும் அல்லது முடியாது என்பதே தற்பொழுது கேள்வியாக இருக்கக்கூடிய சூழலில் எப்படி பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல முடியும்?
4) அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான சபாநாயகரின் முடிவு இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவே முடியாது
5) ஒரு குறிப்பிட்ட உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் காரணம் கண்டறிந்துவிட்டால் தகுதி நீக்க முடிவு எடுக்கப்படும் தேதிவரை அந்த குறிப்பிட்ட நபரை சட்டமன்ற உறுப்பினராக கருத முடியாது அவ்வாறு இருக்கையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் எவ்வாறு நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியும்?
6) இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு அவசர அவசரமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் எந்தவிதமான ஆலோசனையும் இல்லாமல் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
7) மாநில ஆளுநர் அந்த மாநிலத்தின் அமைச்சரவை குழுவின் அறிவுரைகளுக்கு, முடிவுகளுக்கு கட்டுப்படக்கூடியவர், நிச்சயமாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைப்படி நடக்க கூடியவராக இருக்கக்கூடாது
8) எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஜூலை 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது அதுவரை ஆளுநர் பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டாரா ? நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வில்லை என்றால் வானம் இடிந்து விழுந்து விடவா போகிறதா ?
9) ஆளுநர் கோஷ்யாரின் நடவடிக்கை அரசியல் சாசனத்தின் பத்தாவது அட்டவணையை சுக்குநூறாக நொறுக்குவது போல் உள்ளது
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ ஏக்நாத் ஷிண்டே தரப்பு வாதம்
1) முதலில் அதிருப்தி எம்எல்ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்பியதே கேள்விக்குரியதாக இருக்கிறது. அவ்வாறு இருக்கையில் துணை சபாநாயகர் எப்படி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியும்?
2) இப்போதுள்ள பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதுதான்.
3) ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்தாரா, அல்லது கட்சித்தாவல் தடை சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளானாரா உள்ளிட்ட எதையும் கவனத்தில் கொள்ள தேவையில்லை, ஏனெனில் இந்த விவகாரம் தனி விவகாரம், நம்பிக்கை வாக்கெடுப்புடன் அதை சம்மந்தப்படுத்த தேவையில்லை
4) பொதுவாக நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்துங்கள் இல்லையென்றால் குதிரை பேரம் நடந்து விடும் என்று தான் கட்சிகள் நீதிமன்றத்தை நாடுவார்கள். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக இருக்கிறது, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தடை கோரி வந்துள்ளனர்.
5) ஏற்கனவே நபம் ரெபியா, சிவராஜ் சிங் சவுகான் வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்திற்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவு படுத்தப்பட்டுள்ளது
6) அரசியல் பொறுப்பு மற்றும் அரசியல் ஒழுக்கத்தை நிலைநாட்டவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது
7) 55 சட்டமன்ற உறுப்பினர்களில் முப்பத்தி ஒன்பது பேர் எனது தரப்புக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு செல்ல முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தயங்குகிறார்
8) நாங்கள் சிவசேனா கட்சியை விட்டு போகவில்லை இன்னும் சொல்லப்போனால் நாங்கள்தான் சிவசேனா கட்சி எங்களிடம் தான் பெரும்பான்மை பலம் உள்ளது
மகாராஷ்டிர ஆளுநர் தரப்பு வாதம்
1) சபாநாயகர் ஒரு சட்டப்பேரவையில் யார் வாக்களிக்க வேண்டும், யார் வாக்களிக்கக் கூடாது என்பதை முடிவெடுக்க முடியாது
2) மகாராஷ்டிரா மாநில ஆளுநருக்கு நிறைய கடிதங்கள் வந்தது. அதில் இணைக்கப் பட்டிருந்த ஆவணங்கள் ஆளுநருக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது. எனவேதான் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த அவர் உத்தரவிட்டார்.
இப்படி மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், தங்கள் உத்தரவுகளை பிறப்பித்த உச்சநீதிமன்றம் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று சிவசேனா தலைமை கொறாடா விடுத்த கோரிக்கையை நிராகரித்தது. அதே நேரம் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகள் இந்த மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணைகளின்போது உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டது என்றும் நீதிபதிகள் கூறினர். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து நாளை மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவது உறுதியாகியுள்ளது. நாளை காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சட்டப்பேரவைச் செயலாளருக்கு மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.








