நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 60 பேர் படுகொலை!

நைஜீரியாவில் நள்ளிரவு ஊருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவில் 16 ஆண்டுகளாக போகோ ஹரம் பயங்கரவாதிகள் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.போகோ ஹரம் பயங்கரவாதிகள் மேற்கத்திய கல்விக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்தகோரி வருகின்றனர்.

இதனிடையே அந்நாட்டின் வடக்கே அமைந்த அண்டை நாடுகளான நைஜர் உள்பட பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் பரவி உள்ளது. இத காரணமாக 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து சென்றதாக ஐ.நா. அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், நாட்டின் வடகிழக்கே அமைந்த, தருல் ஜமால் பகுதியில் நேற்று இரவு திடீரென புகுந்த பயங்கரவாதிகள் கிராம மக்களை துப்பாக்கிகளால் சுட்டு கொன்றுள்ளனர். இதில், அப்பாவி மக்கள் 60 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனை போர்னோ மாகாண ஆளுநர் பாபாகானா ஜூலும் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம். வீடுகளில் வசிப்போர் வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என கெஞ்சி கேட்டு கொள்கிறோம். பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து விட்டோம். உணவு மற்றும் பிற உயிர்காக்கும் பொருட்களுக்கும் ஏற்பாடு செய்து விட்டோம்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.