பெற்றோர், சகோதரி, பாட்டி… குடும்பத்தினரை கொன்று புதைத்த கொடூர மகன்!

பெற்றோர், சகோதரி உட்பட 4 பேரை கொன்று புதைத்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் குருதோலா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜாவத் அலி (53). இவர்…

பெற்றோர், சகோதரி உட்பட 4 பேரை கொன்று புதைத்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் குருதோலா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜாவத் அலி (53). இவர் மனைவி இரா பாய் (39). இவர்கள், மகன்கள் ஆரிப் முகமது (22), ஆசிப் முகமது (19), மகள் ரிமா (16), அலியின் தாய் அலேக்நூர் பேவா (73) ஆகியோருடன் வசித்து வந்தனர்.

இதில் ஆரிப் முகமது கொல்கத்தாவுக்கு வேலைக்காக சென்றுவிட்டார். ஆசிப்புக்கு பணக்காரனாக வேண்டும் என்று ஆசை. இதற்காக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெற்றோருடன் அவருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பெற்றோர் அவரைக் கண்டிக்க ஆரம்பித்ததை அடுத்து அவர்களை கொலை செய்ய முடிவு செய்தார், ஆசிப்.

இதையடுத்து பெற்ற தாய், தந்தை, உடன் பிறந்த சகோதரி, பாட்டி ஆகியோருக்கு குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். பிறகு அவர்கள் கை, கால்களை கட்டிப்போட்டு வீட்டின் அருகில் உள்ள குடோனுக்கு கொண்டு சென்றார். அங்கு செயற்கையாக உருவாக்கிய குளம் ஒன்றில் அவர்களை மூழ்கடித்துக் கொன்றிருக் கிறார். அவர்கள் இறந்த பிறகு, உடல்களை அங்கேயே குழிதோண்டி புதைத்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரி மாதம்.

இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனது சகோதரருக்கு போன் செய்து அனைவரையும் கொன்றுவிட்டதாகக் கூறியிருக்கிறார். இதற்கிடையே, தனது வீட்டை சுற்றி சிசிடிவி கேமராவை பொருத்தி அக்கம் பக்கத்தினரின் நடவடிக்கையை கண்காணித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து நான்கு மாதத்துக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய ஆரிப், இதுபற்றி போலீசில் புகார் செய்தார். அவர் ஏன் இவ்வளவு தாமதமாக புகார் செய்தார் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவரிடமும் போலீசார், விசாரித்து வருகின்றனர். தன்னையும் தன் சகோதரர் கொல்ல முயன்றதாகவும் அவரிடம் இருந்து தான் தப்பிவிட்டதாகவும் ஆரிப் தெரிவித்துள்ளார்.

கொலை செய்ததாக ஆசிப்பை கைது செய்த போலீசார், சடலங்களை தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.