தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் வீட்டில் இருப்பதே சிறந்தது; நீதிமன்றம்

ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தற்போது இருக்கும் ஒரு வழி தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டுமே. வைரஸ் பரவல் குறைந்ததைத்தொடர்ந்து  பள்ளிகள் தொடங்கி  நேரடி…

ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தற்போது இருக்கும் ஒரு வழி தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டுமே. வைரஸ் பரவல் குறைந்ததைத்தொடர்ந்து  பள்ளிகள் தொடங்கி  நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என அறம் அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, ஆசிரியர்களை  தடுப்பூசி செலுத்தி கொள்ள கட்டாயப்படுத்த கூடாது என்பதை ஏற்க முடியாது என தெரிவித்தனர்.

மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என தெரிவித்த நீதிபதிகள், தடுப்பூசி செலுத்தாமல் இருந்து எந்த குழந்தையாவது உயிரிழக்க நேர்ந்தால், யார் பொறுப்பேற்பது எனவும் கேள்வி எழுப்பினர். சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த விருப்பப்படாத ஆசிரியர்கள் வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது என்றும், மாணவர்களின் நலன் கருதியே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர். வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தெரிவித்தை ஏற்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.