உதகையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

உதகை அருகே அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). இவர் 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் பணியாற்றி உள்ளார். இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உதகை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார். அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுத்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அரசு பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீஸார் சென்றுள்ளனர். அப்போது உடலில் நல்ல தொடுதல், (good touch) கெட்ட தொடுதல் (bad touch) குறித்து மாணவ- மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் பயிற்சி வகுப்பு முடிந்ததும் பள்ளியில் இருந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், உடலில் தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார்.

இதேபோல் பல மாணவிகளையும் அவர் மார்பு பகுதி மற்றும் உடலின் பின்புறம் உள்பட பல இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் ஒரு சில நேரங்களில் மாணவிகளுக்கு முத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பள்ளியில் படித்த 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரினால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் உதகை ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி போக்சோ வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து நள்ளிரவு உதகை நீதிமன்றத்தில் அஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.