சமையல் எண்ணெய் வரி குறைப்பு!

சமையல் எண்ணெய்களின் மீதான வரி குறைப்பால், சந்தைகளில் எண்ணெயின் விலை குறையும் என மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் 50 முதல் 60 சதவீத சமையல் எண்ணெய்…

சமையல் எண்ணெய்களின் மீதான வரி குறைப்பால், சந்தைகளில் எண்ணெயின் விலை குறையும் என மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் 50 முதல் 60 சதவீத சமையல் எண்ணெய் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ப்படுகிறது. இதனால் அந்த பொருட்கள் மீதான வரி உயர்வால் சமையல் எண்ணெய் விலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது, சுத்திகரிக்கப்படாத பாமாயில், சுத்திகரிக்கப்படாத சோயா எண்ணெய், சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய் மீதான வேளாண் உட்கட்டமைப்பு செஸ் (Cess) வரியானது 20 சதவிகிதத்திலிருந்து குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்படாத பாமாயில் மீதான கலால் வரி 7.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேபோல சுத்திகரிக்கப்படாத சோயா எண்ணெய், சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெயின் கலால் வரி 5 சதவிதமாக குறைந்துள்ளது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் அடிப்படை கலால் வரி 17.5% இருந்து 12.5 சதவிகிதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட சோயா மற்றும் சூரிய காந்தி எண்ணெயின் அடிப்படை கலால் வரி 32.5 சதவிகிதத்திலிருந்து 17.5 சதவிகதாமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வரி குறைப்பால் நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலையானது லிட்டருக்கு 5 முதல் 20 ரூபாய் வரை குறையும் என மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சமையல் எண்ணெயின் விலை ஏற்றத்தால் மக்கள் அவதியுற்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.