தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக சட்டப் பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் வாக்குப் பதிவிற்காக 1 லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 205 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 807 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் 607 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவிற்காக 7 ஆயிரத்து 98 வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதனுடன் 7 ஆயிரத்து 454 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 7 ஆயிரத்து 454 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. சென்னையில் கொளத்தூர் தொகுதியில் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்களும், தி.நகர் தொகுதியில் குறைவான வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.







