தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள், தங்களை மீட்க கோரி உருக்கமாக ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் தாய்லாந்திற்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 13 தமிழர்கள் உள்ளிட்ட 16 இந்தியர்களை, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்த அந்நாட்டு சமூக விரோத கும்பல் முயற்சித்துள்ளது. மேலும் அவர்களை தாக்கியும் உள்ளது. இதுகுறித்து அக்கும்பலிடம் சிக்கியுள்ள சிலர், தங்கள் உறவினர்களுக்கு வீடியோ பதிவு மூலம் தகவல் அனுப்பி தாங்கள் சிக்கியுள்ளதைத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மியான்மரில் இருந்த இந்தியர்கள் சிலரையும் அந்த கும்பல் தாய்லாந்தில் கொண்டு சென்றுவிட்டுள்ளது. அங்கு தாய்லாந்து ராணுவத்தால் கைதான அவர்களுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்ததுடன், தாய்லாந்து குடியேற்றப் பிரிவின் தடுப்பு முகாமில் தங்கவைத்துள்ளது.
இதுதொடர்பாக, அங்கு சிக்கியுள்ள தமிழர்களில் ஒருவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், தங்களை மீட்க தமிழ்நாடு முதலமைச்சரும், மத்திய வெளியுறவுத் துறையும் உதவ வேண்டும் எனவும், இதுவே தங்களின் கடைசி தகவலாக இருக்கலாம் எனவும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-ம.பவித்ரா








