நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் நேற்று முன்தினம் காலை சுமார் 8:30 மணி அளவில் பனிப்பாறைச் சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள், வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்தன.
இந்த பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து கைலாஷ் பகுதிக்கு சென்ற 49 பேர், ஈஷா யோகா மையத்தில் இருந்து சென்ற 150 பேர் என நூற்றுக்கணக்கான தமிழர்கள் நேப்பாளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே நேபாளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது. அதேபோல நேற்று முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு நேப்பாளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணியில் ஈடுபட அமைச்சர்கள் ஆதவார்ஜுணா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு உள்ளிட்டோர் அடங்கிய குழு நேற்று இரவு டெல்லி சென்றடைந்தனர். இந்த நிலையில் இன்று நேபாளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளை மேற்பார்வையிட, தமிழக அமைச்சர்கள் குழு டெல்லியில் கூட்டம் கூடியது. இதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்து தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.




