முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க வாழ் தமிழர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்த செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த சூழலில் நேற்று சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சிக்கு வேட்டி, சட்டை அணிந்து சென்ற முதலமைச்சருக்கு அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்” என்று நெகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அந்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அதனுடன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க வாழ் தமிழர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்த செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.







