தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் பண்டிகை சமயத்தின்போது கொரோனா தொற்று அதிகரித்தது. இதனால் தீபாவளி சமயத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துகொண்டே வருகிறது.
மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஒரே நாளில் 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,10,756 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 12 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,238 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 924 கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நலம்பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 26,64,247 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 10,271 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டங்களைப் பொறுத்தவரை சென்னையில் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 100க்கும் குறைவாகவே பாதிப்பு பதிவாகியுள்ளது.







