தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை 3 கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்டா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், கூட்டம் கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு அபராத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் சென்றதாக ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 329 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 3 கோடியே 44 லட்சத்து 26 ஆயிரத்து 700 ரூபாய் அபதாரம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், சமூக இடைவெளியை பின்பற்றாததால் 1,910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அதிக அளவில் பொது இடங்களில் கூடியதற்காக 1,552 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.







