காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்துவிடாமல் கடந்த 9 ஆண்டுகளில் 5 முறை கர்நாடக அரசு ஏமாற்றிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரத்தை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தமிழ்நாடு அரசு சார்பில் விரிவான பதில் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் காவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பை வழங்கிய பொழுது மேகதாது அணை அமைப்பது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எந்த ஒரு உரிமையையும் வழங்கவில்லை என அந்த பதில் மனுவில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிடுவது சட்டத்திற்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் முரணானது என தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகள் தென்மேற்கு பருவமழையின் போது காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்துவிடாமல் கர்நாடக அரசு ஏமாற்றியுள்ளது எனவும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கக் கூடிய தனது அதிகார வரம்பிற்குள் மட்டும் தான் செயல்பட முடியும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேகதாது அணை திட்டத்தை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது




