மருது சகோதரர்கள் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

மருது சகோதரர்களின் 225வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு தலைவர்களும் அவர்களின் நினைவைப் போற்றி தங்களின் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடிய மாவீரர்கள் மருது சகோதரர்கள். சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த பெரிய மருது, சின்ன மருது ஆகிய இருவரும் அரசி வேலுநாச்சியாரின் படைத் தளபதிகளாகவும், பின்னர் சிவகங்கைச் சீமையின் ஆட்சியாளர்களாகவும் விளங்கியவர்கள். இறுதியில், ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட மருது சகோதரர்கள், 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி திருப்பத்தூரில் தூக்*லிடப்பட்டனர். நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த இவர்களின் வீரமும் தியாகமும் தமிழர்களின் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன. இன்று அவர்களின் 225 வது நினைவு நாள் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக பல்வேறு தலைவர்களும் தங்களது மரியாதையை, புகழஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

திமுக எம்.பி கனிமொழி இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து வீரத்துடன் போராடிய மாவீரர்களான மருது சகோதரர்களின் நினைவுநாளான இன்று, அவர்களின் வீரமிகு வரலாற்றை நினைவுகூர்வோம். தாய்நிலத்தின் விடுதலைக்காகத் தங்கள் உயிரையும் துச்சமென எண்ணிப் போராடிய மருது சகோதரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்!” என அவர் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, விடுதலை வேட்கைக்கு வித்திட்ட வீர வேங்கைகளும், தாய்மண்ணின் விடுதலைக்காகத் தங்களின் உயிரையும் துச்சமெனக் கருதி தியாகம் செய்த மாமன்னர்களுமான மருதுபாண்டியர்களின் நினைவுதினம் இன்று. ஆங்கிலேயப் படைகளுக்கு அடிபணியாத நெஞ்சுரத்தோடும், தாய்நாட்டின் விடுதலைக்காகத் தளராத போர்க்குணத்தோடும், மக்களின் உரிமைக்காக உயிரையும் அர்ப்பணித்த தென்னகத்தின் விடுதலைப் போராட்ட முன்னோடிகளான மருதுபாண்டியர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீரத்துடன் போராடி, தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரையும் ஈந்த மாவீரர்கள் மருது சகோதரர்கள் அவர்களின் நினைவு தினம் இன்று! சிவகங்கை மண்ணின் வீரச் சின்னங்களாகத் திகழ்ந்த பெரிய மருது, சின்ன மருது சகோதரர்கள், அந்நிய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டி விடுதலைப் போராட்டத்திற்கு வலிமை சேர்த்தவர்கள். அவர்களின் அஞ்சா நெஞ்சமும், தாய்மண் மீதான பற்றும், தன்னலமற்ற தியாகமும் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன. தேசத்தின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த மருது சகோதரர்களின் வீர வரலாற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்போம்! வீர மருது சகோதரர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி ஸ்ரீநிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரத்திற்கும், தியாகத்திற்கும், தன்னலமற்ற தேசப்பற்றிற்கும் அடையாளமாகத் திகழும் சிவகங்கைச் சீமையின் மாவீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினத்தில், அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன். அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக அஞ்சாது போராடிய அவர்களின் வீர வரலாறு, தலைமுறைகள் பல கடந்தும் நம் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கும்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.