தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள், எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என மாநில முதல்அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்அமைச்சர்களும் கலந்துக் கொண்டனர். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று, பெட்ரோல்- டீசல் விலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை குறைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் கலால் வரியை குறைத்ததை சுட்டிக்காட்டினார். அப்போது மாநிலங்கள் தங்கள் வரிகளை குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
தொடர்ந்து பேசிய அவர், சில மாநிலங்கள் வரிகளை குறைத்துள்ளன. ஆனால் சில மாநிலங்கள் குறைக்காததால் மக்களுக்கு எந்த பலனையும் தரவில்லை.இதனால் இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இது ஒரு வகையில் மாநில மக்களுக்கு செய்யும் அநீதிதான். இது அண்டை மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு, மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் மக்கள் நலன் கருதி எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் , வாட் வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.








