தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 10,518 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று முதல் வரும் 23ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.தினசரி இயக்கப்பட கூடிய 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக 4,218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்காக சென்னையில் 5 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கே.கே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து, இ.சி.ஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து, திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சிக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர் ,சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலுக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், இதேபோன்று திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் இருந்து, வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், ஓசூர் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், இதேபோன்று திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டைக்கும் மற்றும், திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மற்றும் பெங்களூருவிற்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







