ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற கூட்டத் தொடர் குறித்து ஆலோசனை நடத்தினார்.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்புக்காக கலைவாணர் அரங்கில் மே 11ம் தேதி சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு மறுநாள் சபாநாயகர் தேர்வு முடிந்த பிறகு சட்டமன்ற கூட்டத் தொடர் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பிறகு இதுவரை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவில்லை.
இதனிடையே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில் சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். அப்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் குறித்து கலந்தாலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை நேரில் சந்தித்தார். சந்திப்பின்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் ஆளுநர் கேட்டறிந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







