ஆட்சிப் பணி அதிகாரி, எழுத்தாளர், இளைஞர்களின் ஊக்குவிக்கும் பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்ட தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளாரான இறையன்பு ஐ.ஏ.எஸ் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெ. இறையன்பு 1988- ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி.
1963-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி சேலம் மாவட்டத்தில் காட்டூரில் வெங்கடாசலம் -பேபி சரோஜா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் இறையன்பு .
வேளாண்மைப் பட்டதாரியான இறையன்பு ,தமிழ் வழியே ஐ.ஏ,எஸ் தேர்வை எழுதி வெற்றிக்கண்டவர். இவருடைய மூத்த சகோதரர் திருப்புகழ் குஜராத் பணிப் பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி . ஓய்வுக்கு பின்னும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ளார் வெ. திருப்புகழ்.
இந்திய ஆட்சிப் பணியில் உள்ள அதிகாரிகளில் இறையன்பு வித்தியாசமானவர். சமூக அக்கறை மிகுந்தவர். எளியோருடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவர்களுடன் நெருங்கிப் பழகுபவர். நேர்மை, பாரபட்சமற்ற தன்மை போன்றவற்றை பணியின் தொடக்கத்திலிருந்து ஏற்றுக்கொண்டவர் .
நியாயமான நிர்வாகத்தை நடத்துவதுடன் சிறந்த ஆளுகையை தருவதற்காக அரசு இயந்திரத்தை முடுக்கி விடுபவர். சில நேரங்களில் மனுதாரர்கள் மனு கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்குள் அவர்களுடைய குறைகளைத் தீர்த்து வைத்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பணியைத்தொடங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த போது ஆட்சியரின் பணி மக்களுக்கு முழுவதுமாக பணி செய்வதே என்பதை நிரூபித்தவர். கடலூர் மாவட்டத்தில் இவர் சுனாமி பேரிடரால் பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றில் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களூடன் இணைந்து நிவாரணப்பணியில் ஈடுபட்டார். இப்போது அந்தப்பகுதியை மக்கள் இறையன்பு நகர் என்றே பெயர் பலகையை வைத்துள்ளனர்.
இலக்கிய கூட்டங்களிலும், எழுத்தாளர் வாசகர் வட்டங்களிலும் நீண்ட உரை நிகழ்த்தி பார்வையாளர்களை தன் அறிவு வீச்சால் திகைக்க வைப்பவர். ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி என்ற புத்தகத்தின் வழியே தமிழ்நாட்டு மாணவர்களை, இளைஞர்களை இந்திய ஆட்சிப்பணி, இதர அரசுப்பணிகளில் அதிகமாக பங்கெடுக்க வழிகாட்டியவர்.
இதுவரை 100 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய இலக்க அறிவைக்கண்ட அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா 1995 ல் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத்தமிழ்நாட்டை நடத்த சிறப்பு அலுவலராக நியமித்தார். அதனையும் வெற்றியாக்கினார் இறையன்பு.

அதே போல் 2010 -ம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான அரசு நடத்திய உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிலும் சிறப்பு அலுவலர் பொறுப்பை ஏற்று , செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டினார். செம்மொழி மாநாட்டில் திருவள்ளுவரும், ஷேக்ஸ்பியரும் என்ற தலைமையில் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்து அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் பாராட்டையும், பரிசையும் பெற்றவர்.
உளவியலில் முதுகலைப் பட்டம் , வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம், மேலாண்மையில் முதுமுனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். என்றும் படித்துக்கொண்டே இருக்கும் அரசு அதிகாரி இறையன்பு..
சுற்றுச்சூழல், வனத்துறை செயலாளராக இருந்த போது , பல புதுமைகளை புகுத்தி வெற்றி கண்டவர். தமிழ்நாடு அரசின் , சுற்றுலாத்துறை செயலாளராக இருந்த போது சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை சுற்றுலா தலங்களில் பல வகைகளில் புதுமைகளை புகுத்தி தமிழ்நாடு சுற்றுலாவை தொலைநோக்கில் பன் மடங்கு மேம்படுத்தினார்.

அரசின் கூடுதல் தலைமைச் செயலர் நிலையில் , அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சித் துறைத் தலைவராக இருந்த போது அலுவலக் உதவியாளர், எழுத்தர், அலுவலர், என பல பிரிவு அரசு பிரிவினருக்கும் சுழற்சி அடிப்படையில் கணினி பயிற்சியை வழங்கினார்.
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சியில் , பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 2009 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம், உட்பட முக்கிய பொறுப்புகளில் துணை முதலமைச்சரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.







