தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கலாம்: ராமதாஸ் முன்வைக்கும் யோசனை!

தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கலாம் என்ற யோசனையை முன்வைத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்திற்கு 8…

தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கலாம் என்ற யோசனையை முன்வைத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்திற்கு 8 கட்டமாகவும் வாக்குப் பதிவு அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதில், “மேற்கு வங்கத்தின் வளர்ச்சியின்மைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று அதன் மிகப்பெரிய நிலப்பரப்பு ஆகும். மேற்கு வங்கத்தை மூன்றாக பிரித்து மேற்குவங்கம், கூர்க்காலாந்து, காம்தாப்பூர் ஆகிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மேற்கு வங்க மாநிலத்தில் வளர்ச்சி சாத்தியமாகும்” என்று கூறியுள்ளார்.

இதேபோல உத்தரப்பிரதேசத்தை ஐந்தாக பிரித்து உத்தரப்பிரதேசம், ஆவாத் பிரதேசம், பிராஜ் பிரதேசம், புந்தல் காண்ட், பூர்வாஞ்சல் ஆகிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன என்று கூறியுள்ள ராமதாஸ், மராட்டியம் 5 மாநிலங்களாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்துக் கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவது நல்லதா? என்றால் நிச்சயம் நல்லது தான். கடந்த 2000வது ஆண்டில் பிகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைப் பிரித்து ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் ஆகிய 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. புதிதாக பிரிக்கப்பட்ட 3 மாநிலங்களும் அவற்றின் தாய் மாநிலங்களை விட அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. 2014ம் ஆண்டில் பிரிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களும் கூட போட்டிப்போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து வருகின்றன. ஆகவே மாநிலங்கள் பிரிக்கப்படுவது மிகவும் நல்லது. அது வளர்ச்சிக்கு நிச்சயமாக வழி வகுக்கும்” என்ற அவர்,

“மற்ற மாநிலங்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டில் கூட சென்னை, கோவை ஆகியவற்றுக்கு இணையாக மதுரையில் தொழிற்சாலைகள் இல்லை என்பதால் தென் மாவட்டங்களை தனியாக பிரிக்க வேண்டும் என்று அங்குள்ளவர்களும், கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கொங்கு மண்டலத்தில் உள்ளவர்களும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது நினைவு கூறத்தக்கது. சிறியவையே அழகானவை” என்றும் கூறியுள்ளார். அதாவது தமிழகத்தை சென்னை, மதுரை, கோவை என 3 மாநிலங்களாக பிரிக்கலாம் என்ற யோசனையையே இப்படியாக குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.