மீனவர்கள் உயிரிழப்பு: உள் துறைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு!

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 4 பேர் உயிரிழந்தது குறித்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற…

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 4 பேர் உயிரிழந்தது குறித்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஜனவரி 18ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக வாடகை படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்ற மெசியா, நாகராஜ், செந்தில் குமரன், சாம்சந்தவின் ஆகிய 4 நபர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து துன்புறுத்தி கொலை செய்து கடலில் வீசியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

கொலை செய்யப்பட்ட 4 மீனவர்களுக்கு இலங்கை அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், கொலை செய்த இலங்கை கடற்படையை சேர்ந்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் தற்போதுவரை மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டினார்.

மீனவர்களை கொலை செய்த இலங்கை கப்பல் படையை சேர்ந்த நபர்களை கைது செய்யவும், இறந்த இந்திய மீனவர்கள் 4 பேரின் குடும்பத்தினருக்கும் இலங்கை அரசு நிவாரணம் வழங்கவும், இந்திய மீனவர்களையும் அவர்களது உடைமைகளையும் காப்பாற்றுவதற்கு முறையான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் வலியுறுத்தினார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply