தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 76.
காங்கிரஸ் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான குமரி அனந்தனின் மனைவி யும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயுமான கிருஷ்ணகுமாரி, தெலங்கானா ஆளுநர் மாளிகையில் வசித்து வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவர் இன்று அதிகாலை காலமானார்.
இந்த தகவலை ட்விட்டரில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அதில், என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டுப் பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்.
https://twitter.com/DrTamilisaiGuv/status/1427825964294107137
என் தாயாரின் இறுதி ஆசைப்படி, சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு, நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன்.
இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,, தெலுங்கானாஆளுநர்,புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமான செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திப்பதோடு, அன்பு சகோதரிக்கு என் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.
https://twitter.com/EPSTamilNadu/status/1427841427480801286?s=08








