கோடநாடு விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று காலை தொடங்கியது. சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து வந்தனர். சட்டப்பேரவை தொடங்கியதும் அவர்கள் கோடநாடு விவகாரம் தொடர்பாக, அரசு பொய் வழக்குப் போடுவதாகக் கூறி அமளியில் ஈடுபட்டனர்.
பொய் வழக்குப் போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன்
எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர்.
வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அனுமதியின்றி பேரவையில் அதிமுகவினர் பிரச்சனையை எழுப்பக்கூடாது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். பதாகைகளை கொண்டு வந்து அவையில் அதிமுகவினர் கூச்சல் எழுப்பியது திட்டமிட்ட செயல் என்றும் அதனால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றும்படியும் சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக, பாமக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்தின் வெளியே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.








