புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் இந்திராகாந்தி பட்டமேற்படிப்பு மையம் மற்றும் பொது மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிலையத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக 800 ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தற்போது புதுச்சேரியில் ஆக்ஸிஜனோடு கூடிய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளதாகவும் தமிழிசை தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

புதுச்சேரியை பெறுத்த வரை ஆக்சிஜன் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் இளைஞர்கள் என தெரியவந்துள்ளதாக கூறினார். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா பரவல் கட்டுபாடு விதிமுறைகளை பின்பற்றியே புதிய அரசின் பதவி ஏற்பு விழா நாளை நடைபெற உள்ளதாகவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.