உத்தரகாண்டில் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி: முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவிப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தில், விரைவில் உத்தரகாண்ட் – தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சார்பில் டிசம்பர் 8, 9-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள்…

உத்தரகாண்ட் மாநிலத்தில், விரைவில் உத்தரகாண்ட் – தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் சார்பில் டிசம்பர் 8, 9-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்கு, தமிழ்நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் சத்பால் மஹாராஜ், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சவுரப் பகுகுணா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பேசியதாவது:

“தொழில் முதலீட்டை ஈர்க்க உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் டிசம்பர் 8 மற்றும் 9-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுகிறது. முதலீட்டாளர்களின் முகவரியாக உத்தரகாண்ட் திகழ்ந்து வருகிறது. அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் விமானம், ரயில், சாலை என எளிதில் அணுகும் வகையில் இணைப்பு வசதிகள் உள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில், மருத்துவம், சுற்றுலா, கல்வி என பல துறைகளில் தொழில் துவங்குவோருக்கு சலுகைகள் வழங்க 30 கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மற்றும் உத்தரகாண்ட் இடையே கலாச்சாரத் தொடர்பு உள்ளது. தமிழ் இலக்கண நூல் எழுதிய அகத்தியரின் ஆசிரமம் உத்தரகாண்டில் உள்ளது. வட மாநிலங்களில் உத்தரகாண்டில் மட்டும்தான் முருகன் கோயில் உள்ளது. சமீபத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நடத்தப்பட்டது போல, உத்தரகாண்டில் உத்தரகாண்ட் தமிழ்ச் சங்கமம் வெகுசிறப்பாக நடத்தப்படவுள்ளது” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.