மார்பக புற்றுநோய் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என் சோமு தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ITP என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் பிங்க் ரிப்பன் கிளப் தொடங்கப்பட்டது. இதனை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என் சோமு தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கல்லூரியின் தலைவர் தேவராஜ், ITP அமைப்பின் துணைத்தலைவர் ஸ்ரீவிணுஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழாவில் பேசிய எம்.பி கனிமொழி சோமு, “ஒரு பெண்ணால் தான் ஒரு சமூகத்தை உருவாக்க முடியும். இப்போது உங்களுக்கு கிடைக்கும் கல்வி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று புரியும். எதிர்காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். திருமணத்திற்கு முன் தந்தை, திருமணத்திற்கு பின் கணவர் என்ற நிலையில் இருக்கக்கூடாது. சுயமார்பாக பரிசோதனையை மாதம் ஒருமுறை செய்ய வேண்டும். மார்பக புற்றுநோய் இல்லாத மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் புற்றுநோய் சிகிச்சைகள் தொடர்பான கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளன. எனினும் பெண்கள் தயக்கத்தோடு இதுகுறித்து தன் கணவரிடமே தெரிவிக்காமல் இருக்கக்கூடிய சூழல் தான் உள்ளது. இந்நிலை மாற வேண்டும். இதில் தயக்கம் கொள்ளக்கூடாது. மார்பக பரிசோதனை செய்துகொள்வது அவசியமான ஒன்று. இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.