நடிகர் விவேக் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி

நடிகர் விவேக்கிற்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சியனர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் விவேக்கிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி…

நடிகர் விவேக்கிற்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சியனர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விவேக்கிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விவேக் மறைவுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில்,

“மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர். பத்ம ஸ்ரீ விவேக்கின் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார்.”

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டரில்,

” ‘சின்னக் கலைவாணர்’ மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். சூழலியல் ஆர்வலர். ஆற்றல்மிகு நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாகப் பறித்ததேன்?. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்!”

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில்,

“அண்ணன் விவேக்கின் மரணம் தாங்கிக்கொள்ள முடியாத பேரதிர்ச்சி. கலைஞரின் அன்பை பெற்றவர். தலைவர் அவர்களின் நண்பர். மனிதன் படத்தில் என்னுடன் நடித்தார்- வழிநடத்தினார். திரையிலும் நிஜத்திலும் சமூகம்- சூழலியலுக்காக தொடர்ந்து குரல்கொடுத்தவர். அண்ணனின் மரணம் தமிழகத்துக்கு பேரிழப்பு.”

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருகிங்ணைப்பாளர் சீமான் தனது ட்விட்டரில்,

“கலைச்சேவையும், மக்கள்சேவையும் புரிந்திட்ட மண்ணின் மகத்தான பெருங்கலைஞர் அன்புச்சகோதரர் விவேக் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு!”

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டரில்,

“விவேக்கின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் , திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அந்தளவுக்கு சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும் , செயற்பாட்டாளராகவும் விவேக் திகழ்ந்தார். ‘சனங்களின் கலைஞன்’ எனக் கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.”

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டரில்,

“நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.”

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டரில்,

“ஈடு இணை செய்ய முடியாத அவரது இழப்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் மீது அக்கறை கொண்டு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து ‘சின்ன கலைவாணர்’ என போற்றப்பட்ட நடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை. தன்னலம் பார்க்காமல் சமூக அக்கறையோடு சேவை புரிந்து வந்த நடிகர் விவேக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.”

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

“தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று மக்களால் சின்னக் கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர். சிறந்த சுற்றுச் சூழல் ஆர்வலராக பல இலட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கை வளங்களை பாதுகாத்துள்ளார்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.”

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி தனது ட்விட்டரில்,

“நடிகர் விவேக்கின் அகால மரணம் அதிர்ச்சியளிக்கிறது. நடிப்பைத் தாண்டிய சமூக அக்கறை கொண்டவர். சுற்றுச்சூழல் ஆர்வலர். அவரை இழந்து வாடும் குடும்பதினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா அமைதி கொள்ளட்டும்.”

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

“நண்பர் விவேக் இனி மீண்டு வர முடியாது என்றாலும், அவரது திரைப்படங்களால், சமூக சேவைகளால், சமூக சீர்திருத்த கருத்துகளால் என்றும் மக்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் வசித்துகொண்டே இருப்பார். மாணவர்களும், இளைஞர்களும் அவரது அறிவுரைகளை ஏற்று அவர் விட்டுச்சென்ற பணிகளை நிறைவேற்றுவதே அவருக்கு செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும்.”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில்,

“நகைச்சுவையால் மக்களை சிந்திக்க வைக்க முடியும் என்பதை நிகழ்த்திக்காட்டிய பெருமை நடிகர் விவேக்கை சேரும். இவ்வளவு சீக்கரத்தில் மரணமடைவார் என்று எதிர்ப்பர்க்கவில்லை.”

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அளித்த பேட்டியில்,

“தமிழகத்திற்கு இந்திய அளவில் பெருமை சேர்த்தவர் நடிகர் விவேக். சின்னக் கலைவாணர் பட்டத்திற்கு 100% பொருத்தமானவர்.”

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.