ஊராட்சி மன்ற தலைவரைக் கண்டித்து 6 கவுன்சிலர்கள் திடீர் ராஜினாமா!

மதுரை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி.…

மதுரை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி. இவர்  மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வார்டு உறுப்பினர்கள் 6 பேர் தனித்தனியாக மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.
ஊராட்சி நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் நடக்கவில்லை, ஊராட்சி செயலரின் முறைகேடு, வார்டில் பணிகள் நடக்கவில்லை, 100 நாள் வேலையில் முறைகேடு, ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் கணவர் தலையீடு, நிதி ஒதுக்குவதில் பாரபட்சம், வீட்டு பிளான் அனுமதிக்கு லஞ்சம்  உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து ராஜினாமா செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஊராட்சி மன்றத் தலைவர், அவரது கணவர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து ஊழல் செய்கின்றனர் எனவும், ஊழலை தட்டி கேட்கும் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வேன் என மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் கூறினர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். 12 வார்டுகளை கொண்ட  கோவிலாங்குளம் ஊராட்சியில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.