தேசிய விளையாட்டுத்துறை விருது பெறும் தமிழக வீரர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

தேசிய விளையாட்டுத்துறை விருதுகளைப் பெறும் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தேசிய விளையாட்டுத்துறை விருதுகளை பெறுபவர்களின் பட்டியலை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த விருதுகளில் உயரிய…

தேசிய விளையாட்டுத்துறை விருதுகளைப் பெறும் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தேசிய விளையாட்டுத்துறை விருதுகளை பெறுபவர்களின் பட்டியலை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த விருதுகளில் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது,  டேபிள் டென்னிஸ் போட்டியில் 10 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த, தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சரத் கமலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 3 தங்கப் பதக்கம் உள்பட 4 பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உள்பட 25 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளன. 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று தற்போது உலகின் சிறந்த சதுரங்க வீரர்களில் ஒருவராக விளங்கும் பிரக்யானந்தாவிற்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த இளவேனில் வாளறிவன், கடந்த ஆண்டு நடைபெற்ற காதுகேளாருக்கான ஒலிம்பிக்  போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்த ஜெர்லின் அனிகா ஆகியோருக்கும் அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய விளையாட்டுத்துறை விருது பெறும் மேற்கண்ட தமிழக விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ”இந்தியாவுக்கு 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்து அசத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத் கமல், விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்குத் தேர்வாகியுள்ளதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ள இளம் செஸ் புயல் பிரக்யானந்தா, துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் வாளறிவன் ஆகியோருக்கும் எனது பாராட்டுகள். தகுதிவாய்ந்த மூவருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் தமிழ்நாட்டிலிருந்து மேலும் பல திறமையாளர்கள் மின்ன ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும்!”  என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.