முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

விடியல் கிடைக்குமா? தவிக்கும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் – சிறப்பு கட்டுரை


எஸ்.செந்தில்குமார்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களை சேர்ந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணியாற்றலாம் என்ற அறிவித்தார். இந்த அறிவிப்பானது, கடந்த 10 ஆண்டுகாலமாக பணிசெய்து வரும் பகுதிநேர ஆசிரியர்களான எங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கு காரணம் பணிநிரந்தரம் அறிவிப்பை வெளியிடாமல் முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றம் தந்தது தான்.

தேர்தல் வாக்குறுதி :

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக ஆட்சிக்கு வந்ததும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வேன் என தேர்தல் அறிக்கையிலும், உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியிலும் தொடர்ந்து நம்பிக்கை கொடுத்தவர் தான் இன்றைய முதல்வர் ஸ்டாலின். அத்துடன் திமுக தேர்தல் தயாரிப்பு குழுவுடன் பகுதிநேர ஆசிரியர்கள் முதல் சங்கமாக சந்தித்து தங்கள் கோரிக்கையை ஆளும் திமுகவினர் நினைத்துப் பார்க்க வேண்டும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் 14-10-2020 அன்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு முதன்முதலில் கூடியது. அன்றே முதல் சங்கமாக பகுதிநேர ஆசிரியர்கள் குழுவினர் T.R.பாலு MPஐ சந்தித்து பணி நிரந்தரம் கோரிக்கை சேர்க்க மனு கொடுத்து கேட்டு கொண்டோம். தொடர்ந்து திமுக தேர்தல் குழு வந்த மாவட்டங்களில் மனு கொடுத்து கோரிக்கை சேர்க்க கேட்டு கொண்டோம்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதியில் 181வது வாக்குறுதியாக பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

என சேர்த்து வெளியிட்டது. அதன் காரணமாக பகுதிநேர ஆசிரியர்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தோம்.

கலைஞரின் தேர்தல் வாக்குறுதி:

திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோதும் 2016 தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 192, 193வது கோரிக்கையாக வாக்குறுதி கொடுத்தார். 2021 தேர்தலில் இப்போது கலைஞரின் வழித்தோன்றல் ஸ்டாலினும் இதே வாக்குறுதியை கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்தினார்.

ஆதரித்த எங்களை காக்க வைக்கலாமா?

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் 14-2-2021 அன்று பகுதிநேர ஆசிரியர் ஸ்டாலின் என்பவருடன் நேருக்குநேர் கலந்துரையாடிய தற்போதைய முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், “அந்த ஸ்டாலின் கோரிக்கையை இந்த ஸ்டாலின் நிறைவேற்றித் தருவேன்என்று பேசி பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்தார். அதுபோல்

தருமபுரியில் 1-2-2021 அன்று பகுதிநேர ஆசிரியர் அமிர்தராஜ் என்பவருடன் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிரந்தரம் செய்வேன் என்றார்.

கன்னியாகுமரியில் 6-2-2021 அன்று மேரி வகிதா என்ற பகுதிநேர ஆசிரியருடன் பேசும்போதும் நிரந்தரம் செய்வேன் என திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார்.

பெட்டியில் மனு, கையில் ரசீது:

உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்த இடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிக்கை மனுக்களையும் கொடுத்தோம், அங்கே வைக்கப்பட்ட பெட்டியிலும் போட்டோம். இதற்காக ரசீதும் கொடுத்தார்கள். இதை கையில் வைத்து கொண்டு தலைமை செயலகம் வந்து உரிமையோடு ஸ்டாலினிடம் கேட்கலாம் என்றார்கள்.திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறிய பிறகு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் நாங்கள் மனுக்களை கொடுத்தோம். அதற்கு ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டும், எங்கள் மனு மீது முன்னேற்றம் கிடைக்கவில்லை. பணி நிரந்தரம் செய்யவில்லை.

2 பட்ஜெட்டிலும் ஏமாற்றம் :

திமுக ஆட்சிக்கு வந்து 100 நாளில் வந்த இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்விதுறைக்கு ₹33 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கிய போதும், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் பற்றி அறிவிக்கப்படவில்லை. இரண்டாவது பட்ஜெட்டிலே பள்ளிக்கல்விக்கு முன்பை விட ₹4ஆயிரம் கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டது. அப்படி ₹37ஆயிரம் கோடி ஒதுக்கியும், பணி நிரந்தரம் அறிவிப்பு இல்லாமல் தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியது.

ஆறு கட்சி MLA கோரிக்கை:

திமுகவின் தேர்தல் வாக்குறுதி மட்டுமின்றி, முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக, பாமக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி, தவாக, கொமதேக என 6 கட்சி சார்பில் சட்டமன்றத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட

திமுக தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவார் என அதிமுக ஒரத்தநாடு உறுப்பினர் வைத்திலிங்கம் கேள்விக்கு 6-1-2022 அன்று பதில் அளித்தார். ஆனால் ஒன்றரை ஆண்டு கடந்தும் திமுக ஆட்சியில் பணிநிரந்தரம் செய்வதற்கான முகாந்திரம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.

சம்பளம்கூட உயர்த்தவில்லை:

அதிமுக ஆட்சியிலே 2021ம் ஆண்டு உயர்த்தி கொடுத்த ₹10ஆயிரம் சம்பளத்தை, திமுக ஆட்சிக்கு வந்தும்கூட உயர்த்தவில்லை. 12ஆயிரம் பேருக்கு ₹10ஆயிரம் சம்பளம் கொடுக்க ஒரு ஆண்டில் 11 மாதங்களுக்கு ₹132 கோடி செலவாகிறது. காலமுறை சம்பளம் கொடுக்க, தற்போதைய ₹132 கோடியை, இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும்.

நிரந்தரம் செய்ய ₹250-300 கோடி தேவை:

2 லட்சம், 3 லட்சம் கோடியில் பட்ஜெட் போடுகிறார்கள். அதில் எத்தனையோ திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கும் அரசு, இந்த 12ஆயிரம் பேரை நிரந்தரம் செய்ய, மேலும் ₹250 கோடி நிதியை ஒதுக்கினால் போதும். கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 2ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய மாற்றுத்திறனாளிகளை நிரந்தரம் செய்ய அரசாணை போடப்பட்டது. இப்போதும் முதல்வர் இந்த குழுவில் உள்ளபோதும் 200 மாற்றுத்திறனாளி பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.

ஜாக்டோஜியோவால் அதிர்ச்சி:

நிரந்தரப்பணியில் உள்ள ஆசிரியர்கள் பெரும்பாலும் தொகுப்பூதியத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நிரந்தரம் செய்யப்பட்டவர்கள்தான். ஆனால் அவர்களின் முந்தைய நிலையில் இருந்த எங்களை நிரந்தரம் செய்யும் கோரிக்கையை முதலில் வைக்காமல், அவர்களின் பழைய பென்சன், ஊதியஉயர்வை முன்னிலைப்படுத்தியே முதல்வருக்கு கோரிக்கை வைப்பதால், எங்களின் நிலை பெரிதாக்கப்படவில்லை. இதனால் முதல்வரும் கண்டுகொள்ளவில்லை.

முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். ஆனால் நேரம் ஒதுக்கவில்லை.

ஜாக்டோஜியோ நிர்வாகிகளை சந்திக்கும் முதல்வர், எங்களை சந்திக்க வாய்ப்பு கொடுக்கவில்லை

மே மாதம் சம்பளம் 11 ஆண்டாக மறுப்பு :

அதிமுக ஆட்சியில் 9 முறை மே மாதம் சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டார்கள். திமுகவும் 2 முறை மே மாதம் சம்பளம் கொடுக்கவில்லை. குறைவான சம்பளம் கிடைக்கிறது, அதிலும் ஒருமாதம் சம்பளம் இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வது? முன்பு தான் அதிமுக ஆட்சியில் மே மாதம் வந்தால் அதற்கு சம்பளம் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். திமுக அதனை மீட்டு, இப்போதாவது கொடுத்து இருக்கலாம். ஆனால் அதையும் செய்யவில்லை. ஆண்டு முழுவதும் 12மாதங்களில், இப்படி ஒரு மாதம் சம்பளம் மறுக்கப்படுவதால், இதனால்

வங்கியில்கூட கடன் வாங்க முடியவில்லை. சமக்ர சிக்சாவில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு கிடைக்கிறது. அதையும் பகுதிநேர பெண் ஆசிரியர்கள் பெற அனுமதி இல்லை

என்ற வேதனையான நிலையே நீடிக்கிறது.

முதல்வரிடம் நேரில் கோரிக்கை:

சேலம், தருமபுரி, மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பூர், திருச்சி,திருத்தணி, திருவாரூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் என 20 க்கும் மேற்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு..ஸ்டாலினிடம் நேரில் கோரிக்கை கொடுத்தோம். ஆனால் இன்றுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் கோரிக்கையை முதல்வர் படிப்பதில்லையா என்று ஏங்கும் நிலை எழுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், தருமபுரி, கடலூர், திருச்சி என பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நடந்த முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. அதிலும் முதல்வரின் கவனத்தை ஈர்க்க பணி நிரந்தரம் கோரிக்கை மனுக்களை கொடுத்தோம். அதிலும் முன்னேற்றம் கிடைக்கவில்லை

சமூக வலை தளங்களில் கோரிக்கை:

ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் முதல்வருக்கு கோரிக்கை அனுப்புகிறோம். அதிலும் பின்னடைவு தான். முதல்வரின் கவனத்தை பெற அவ்வப்பொழுது மனு அனுப்புகிறோம். அதை முதல்வர் பார்த்தால் போதும், நிரந்தரம் கிடைத்து விடும் என்று நினைக்கிறோம். அதிமுக ஆட்சியில் நடந்த போராட்டத்தில்

திமுக முன்னணி தலைவர்கள் R.S.பாரதி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா போன்றோர் பங்கேற்று பணி நிரந்தரம் செய்ய குரல் கொடுத்தார்கள். இப்போது திமுக ஆட்சிக்கு வந்தும் கோரிக்கை நிறைவேற்றாத நிலையில்

பிப்ரவரி, மே மாதத்தில் இரண்டு முறை காத்திருப்பு போராட்டம் நடத்தியும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.

சட்டசபையில் பொன்முடி, மஸ்தான் குரல்:

திமுக முன்னணி தலைவர்களும் தற்போதைய அமைச்சர்களுமான பொன்முடி, செஞ்சி மஸ்தான் போன்றோர் அதிமுக ஆட்சியில் சட்டசபையில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யுங்கள் என பேசினார்கள். இப்போது அவர்கள் எல்லாம் திமுக ஆட்சியில் அமைச்சர்கள் ஆகிவிட்டார்கள்.

இதுபோல நிறைய திமுக MLA க்கள் எங்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து சட்டசபையில் முன்பு எல்லாம் பேசினார்கள். இப்போது அவர்கள் முதல்வருக்கு பரிந்துரை செய்தால்கூட போதும்.

எங்கள் கோரிக்கை நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தனியார் ஊழியரை விட மோசமான நிலை :

தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர் போனஸ், பிஎப், இஎஸ்ஐ வாங்கும்போது, அரசு பள்ளியில் வேலை பார்த்தும், எங்களுக்கு சம்பளத்தை தவிர வேறு எதுவுமே கிடைப்பதில்லை. பணி நிரந்தரம் கிடைக்கும் என்ற கனவோடு இந்த பகுதிநேர ஆசிரியர் பணியில் சேர்ந்த 16 ஆயிரம் பேர் கடந்த 2012ஆம் ஆண்டு ₹5ஆயிரம் தொகுப்பூதியத்தில் சேர்ந்தோம். ஆரம்ப சம்பளமான ரூபாய் ஐந்தாயிரம் பின்பு 2014ஆம் ஆண்டு ₹2ஆயிரம் உயர்த்தி ₹7ஆயிரமானது. இதனை அடுத்து 2017ஆம் ஆண்டு ரூபாய் 700 உயர்த்தப்பட்டது.

அதிமுக 10 ஆண்டு ஆட்சி முடியும் தருவாயில் கடைசியாக 2021 ஆண்டு பிப்ரவரி மாதம் ₹2ஆயிரத்து 300 உயர்த்தியதால் ₹10ஆயிரமாக சம்பளம் ஆனது. தற்போதுவரை பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தையே வாங்கி வருகிறோம்.

இந்த 11 ஆண்டில் இறந்து போனவர்கள், ஓய்வு பெற்றவர்கள் போக எஞ்சியுள்ள 12ஆயிரம் பேர் மட்டுமே இப்போது பணிபுரிகிறோம். எங்களுக்கு வயதாகி கொண்டே போகிறது. இன்றே நிரந்தரம் செய்தாலும் சில காலம் தான் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். எனவே இனியும் தாமதம் செய்ய வேண்டாம்.
இந்த 12ஆயிரம் குடும்பம் வாழ, முதல்வர்  மு.க. ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

எங்களுக்கு விடியல் கிடைக்குமா? 

பள்ளிக்கல்வி துறையிலே எங்களுக்கு பிறகு வேலையில் சேர்ந்த 5ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் அனைவரும் நிரந்தரம் செய்யப்பட்டு விட்டார்கள். அதுபோல காவல்துறையில் சிறப்பு இளைஞர் படையினர் 10 ஆயிரம் பேர் நிரந்தரம் செய்யப்பட்டு விட்டார்கள். அதுபோல எஸ்மா டெஸ்மாவின் போது தற்காலிமாக நியமித்த பணியாளர்கள் அனைவரும், பின்னர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நிரந்தரம் செய்யப்பட்டு விட்டார்கள்.
கலைஞர் ஆட்சியிலே 50 ஆயிரம் ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டு விட்டார்கள்.
நாங்கள் மட்டுமே இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் தவிக்கின்றோம். எங்களை கைதூக்கி விடுங்கள். நாங்களும் வாழ வழி கொடுங்கள். விடியல் நாயகனே, விடியல் தாருங்கள்.

– கட்டுரையாளர் – எஸ்.செந்தில்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹைதி நிலநடுக்கம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,297 ஆக உயர்வு

G SaravanaKumar

9 மாவட்டங்களிலும் சேர்மன் பதவியை கைப்பற்றியது திமுக

Halley Karthik

நீட் தேர்வு பாதிப்பு: நாளை அறிக்கை தாக்கல்

Halley Karthik