தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டு உறுப்பினரின் கேள்விகலுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இதனிடையே விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பாதுகாப்பான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகத் திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசியதாவது,
ரூ. 4,800 கோடி மதிப்பீட்டில் வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் (Desalination Plant) அமைக்கப்படும்.
ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில்
குடிநீர் வசதிகளை மேம்படுத்த 1,000 கோடி ரூபாயும், பழமையான 33 கூட்டுக்குடிநீர் திட்டங்களைச் சீரமைக்க முதற்கட்டமாக 300 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.
சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூ. 410 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.” என்று அவர் தெரிவித்தார்.




