போக்குவரத்து துறையினருக்கு லஞ்சம் தராத லாரிகளுக்கு, சட்டப்பிரிவுகளை
தவறாக பயன்படுத்தி அபராதம் விதிக்கப்படுவதாக, தமிழ்நாடு மோட்டார்
போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் இராசாமணி தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் போக்குவரத்து துறை ஆணையரை
சந்தித்து, தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு சார்பில் புகார் மனு
அளிக்கப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு
மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் இராசாமணி, போக்குவரத்துறையில்
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டறிந்து, கைது செய்ய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என தெரிவித்தார்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பொருட்களை எடுத்து செல்பவர்களிடம்,
போக்குவரத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக கூறிய அவர், லஞ்சம் தராத
லாரிகளிடம் சட்டப்பிரிவுகளை தவறாக பயன்படுத்தி அபராதம் பெறுவதாக தெரிவித்தார். மோட்டார் வாகன சட்டம் 194(2) படி அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், ஆன்லைன் அபராதம் தவிர்த்து ஸ்பாட் ஃபைன் விதிக்க வேண்டும் என கூறினார்.
குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் இல்லாத வாகனங்கள் விதிமுறை
மீறி சென்றதாக, அபராதம் விதிக்கப்படுவது ஏற்க முடியாது என தெரிவித்தார்.
போக்குவரத்துறை ஆணையரை சந்திந்து புகார் அளித்துள்ள நிலையில்,
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக போராட்டம் குறித்து
விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.
கு. பாலமுருகன்







