ஆட்டோ மொபைல் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என ஹூண்டாய் நிறுவனத்துடன் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசிற்கும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ 20,000 கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தென் கொரியா நாட்டை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரூ 20,000 கோடி முதலீட்டிலான பணிகள் தொடர்பாக இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் இன்று தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜா மற்றும் முன்னாள் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
” ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிலே கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆட்டோ மொபைல் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தற்போது மின்வாகன உற்பத்தியிலும் முன்னணியில் உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வமான செயல்பாடு முக்கிய காரணம்.
தற்போது மின் ஊர்தி வாகன உறத்தியிலும் தமிழ்நாட்டை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் மூதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்பை அதிகரிக்க முனைந்து செயல்படுவோம்.
தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு சென்று தமிழ்நாடு தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்க துணை புரிந்தார். அதேபோல தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா சிறப்பாக செயல்படுவார் என உறுதியளிக்கிறேன்.”







