கல்வி மற்றும் வளர்ச்சியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘TECH KNOW 2022’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 8 பிரிவுகளின் கீழ் தொழிற்துறையினருக்கு விருதுகளை வழங்கினார். தொடர்ந்து, ஆர்.எஸ்.முனிரத்தினம், டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், சி.கே.ரங்கநாதன் ஆகிய 3 பேருக்கு சிறந்த தமிழ் குடிமகன் விருதுகளை வழங்கினார்.
பின்னர், “நான் முதல்வன்” திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு திறன்பயிற்சி கடிதம் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணியாற்ற பணி ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார். அப்போது, அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு,சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
விருதுகளை வழங்கியபின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் இளைஞருக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாகவும், ஆனால் அதற்கு தகுதி வாய்ந்த இளைஞர்கள் இல்லை என்றும் தொழில் முனைவோர்கள் கூறுவதாக தெரிவித்தார். உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் என்பது அகில இந்திய அளவை காட்டிலும் தமிழ்நாடு சிறப்பான இடத்தில் உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
மாணவர்களின் அறிவு சக்தியை மேம்படுத்துவதுதற்காக “நான் முதல்வன்” என்ற திட்டம் செயல்படுத்துவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். நம்பர் ஒன் முதலமைச்சர் என்று சொல்வதை விட, நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடும் என்பதிலேயே தனக்கு மகிழ்ச்சி என முதலமைச்சர் தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.







