“ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலம் தமிழ்நாடு” – முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலம் தமிழ்நாடு என ஜப்பானிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு…

ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலம் தமிழ்நாடு என ஜப்பானிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், கடந்த 23ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நிறுவன தலைவர்களையும், அமைச்சர்களையும் முதலமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 25ஆம் தேதி அன்று இரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணம் வந்தடைந்தார். தொடர்ந்து, அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி அன்று காலை ஓசாகாவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization – JETRO) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்து உரையாற்றினார்.

இதனையடுத்து, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பிறகு ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜிப்பான், நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையின் சிறப்பைப் பற்றி எடுத்துக்கூறி அதனை பார்வையிடுமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினையேற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜப்பான் நாட்டின், ஒசாகாவில் உள்ள 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் கோட்டையான ஒசாகா கோட்டையை பார்வையிட்டார்.

இந்த நிலையில் ஜப்பான் தலைநகர்  டோக்கியோவில் ”ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன்” இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது..

“ சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஜப்பான் நிறுவனங்கள் வர வேண்டும். நிர்வாக ஆற்றல், மனித வளம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளோம்.

ஜப்பானில் உள்ள மாகாணங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது இந்தியாவில் தமிழ்நாடு தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலமாக உள்ளது.  எனவே மேம்பட்ட உற்பத்திக்கான ஒரு மையத்தை தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டும். மேலும்  இந்தியா-ஜப்பானிய கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்திட வேண்டும் ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.