இந்தியாவில் 12 ஆம் வகுப்பு முடித்த பெண்கள் உயர்கல்விக்கு செல்வது 24% உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 72% பேர் உயர்கல்விக்கு செல்கின்றனர் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரியில் இன்று அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என். ஸ்ரீதர், மாநகராட்சி ஆணையர், துணை கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் 728 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான பல்வேறு வகையான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. மேலும் விவசாயத்திற்கு தேவையான கருவிகள் மற்றும் இருசக்கர வாகனங்களும் இந்த நலத்திட்ட விழாவில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ”இந்தியாவில் 12 ஆம் வகுப்பு முடித்த பெண்களில் 24% பேர் உயர் கல்விக்கு செல்கின்றனர். அதே நேரம் தமிழ்நாட்டில் 72% பேர் உயர்கல்விக்கு செல்கின்றனர். இதுபோன்று இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இதற்கெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான கல்வி திட்டங்களே காரணம், மேலும் இது முதலமைச்சரின் சிறப்பான ஆட்சிக்கு ஒரு சான்று” என்று கூறினார்.







