தமிழக ஆளுநரும்.., சர்ச்சை கருத்துகளும்!!

ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி மூலம் மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.   தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் சர்ச்சைக்குறிய கருத்துகளுக்குப் பஞ்சமில்லாத ஓர் ஆளுநராக ஆர்.என்.ரவி பார்க்கப்படுகிறார். ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்து…

ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி மூலம் மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.  

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் சர்ச்சைக்குறிய கருத்துகளுக்குப் பஞ்சமில்லாத ஓர் ஆளுநராக ஆர்.என்.ரவி பார்க்கப்படுகிறார். ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்து அவர் செல்லும் இடங்களிளெல்லாம் நீட், மும்மொழித்திட்டம், புதிய கல்விக்கொள்கை, சனாதனம், திராவிடம் என அவர் பேசிய சர்ச்சைப் பேச்சுகள் ஏராளம். அதன் தொகுப்புகளை இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி பதவியேற்றார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கேரளாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில வன்முறையை தடுக்கும் பணியிலும் இருந்தவர். இதுதவிர மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களிலும் ஆளுநராக பதவி வகித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என் ரவி தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்ற போது, அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஏனெனில், தமிழகத்தின் மிக முக்கியமான நீட் தேர்வு ரத்து மசோதா, எழுவர் விடுதலை தொடர்பான மசோதாக்கள் அவரது கைகளில் இருந்தன. ஆனால் இந்த இரண்டு விவகாரங்களிலும் ஆளுநரின் செயல்பாடு தமிழ்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.

1. தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு, முதன் முறையாக சுதந்திர தின விழா வாழ்த்துச் செய்தியில் ஒரு முக்கியமான வரியை குறிப்பிட்டிருந்தார். அந்த வாழ்த்துச் செய்தியில், நீட் தேர்வுக்கு பிறகு தான் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் அதிகளவு சேருவதாக கூறியிருந்தார். இதற்கு தமிழக எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. தமிழக அரசு சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

2. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரிய தமிழ்நாடு அரசின் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வு ரத்து மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சரியான காரணங்களை அரசு தெரிவிக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறியிருந்தார். நீட் தேர்வு அவசியம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையும் ஆளுநர் சுட்டிக்காட்டி இருந்தார். இதற்குப் பிறகு மீண்டும் அனைத்துக் கட்சிக்கூட்டம் கூடி, தமிழ்நாடு அரசு சார்பாக மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.

3. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவன் இல்லத்தில் 2022-ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகள் திருமணம் நடைபெற்றது. இதற்காக உதகை ராஜ் பவனின் சுவற்றுக்கு வெள்ளை வர்ணம் பூசிவிட்டார். 145 ஆண்டு காலம் பழமை வாய்ந்த உதகை ராஜ்பவன், கடந்த 40 ஆண்டுகளாக பசுமை நிறத்தில் காணப்பட்ட நிலையில், அதனை வெண்மை நிறத்திற்கு மாற்றிய சர்ச்சை விவகாரம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

4. தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா 2022-ம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ஆளுநர் ரவியின் பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் பேசிய அவர், சில பிராந்தியங்கள் மட்டும் முன்னேறுவது சரியல்ல. இதற்கு பெயர்தான் ‘டார்வினியன் மாடல்’. சில புத்திக் கூர்மையுள்ளவர்கள் மட்டும் எல்லாப் பலன்களையும் எடுத்துக்கொண்டு மற்றவர்களை விட்டு விடுகிறார்கள் என்று பேசியது சர்ச்சையானது.

இதே போல் பல்வேறு தருணங்களில் ஆளுநர் பேசி சர்ச்சையான கருத்துகளை பார்க்கலாம்….

5. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையானது நாட்டின் 40% காப்பர் தேவையைப் பூர்த்தி செய்து வந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு காப்பர் எந்த அளவுக்கு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மக்களை தூண்டிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துவிட்டனர்.

6. மிகச் சிறந்த எத்தனையோ திட்டங்களில் அக்னிபாத் திட்டம் புரட்சிகரமான ஒரு திட்டம். ஆனால் அக்னிபாத் திட்டத்தை தவறான வழிகாட்டுதலில், தவறாகப் புரிந்துகொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்கள் அதனை எதிர்த்து வருகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் செயல்பட்டுவருகிறார்கள். அவர்களின் சதித் திட்டத்தை முறியடிப்போம்.

7. தமிழ்நாடு மாணவர்களும், மற்ற மாநில மாணவர்களைப்போல பிற இந்திய மொழிகளையும் கற்க வழிவகை செய்ய வேண்டும். அதை மறுப்பது சரியல்ல.

8. தமிழ்நாட்டில் பட்டியலின மக்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுகிறது. இன்னும் பல இடங்களில், பல பள்ளிகள், கோயில்களில் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர்.

9. சனாதன தர்மம் தான் நம் பாரதத்தை உருவாக்கியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசியலமைப்புச் சட்டம், சனாதன தர்மத்தில் கூறப்பட்டிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றி கூறுகிறோம். அதையேதான் சனாதன தர்மமும் சொல்கிறது.

10. கோயம்புத்தூர் பயங்கரவாதத்துக்குப் பெயர் போன இடம். கோவையில் நடந்தது மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் சதித்திட்டத்தில் பல முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. கோவை குண்டுவெடிப்பு நிகழ்ந்து நான்கு நாள்களுக்கு பிறகு தான் தமிழக அரசு என்.ஐ.ஏ-வுக்கு வழக்கை ஒப்படைத்திருக்கிறது. இந்த காலதாமதம் ஏன்?.

11. புதிய கல்விக் கொள்கையை அரசியல்ரீதியாகப் பார்க்கக் கூடாது. நம் கலாசாரம், பாரம்பர்யம், வரலாறு ஆகியவை பல அரசுகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. மறைக்கப்பட்ட அந்த வரலாற்றைப் புதிய தேசிய கல்விக் கொள்கையால் மீட்டெடுக்க முடியும். புதிய தேசியக் கல்விக் கொள்கை என்னவென்று இங்குள்ள அரசியல் தலைவர்கள் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கு யாரும் அதை முழுமையாகப் படிக்கவில்லை.

12. 2023 ஜனவரி 4ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் நிறைவடைந்த காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும் ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழகம், தமிழ்நாடு என்ற வார்த்தைகள் மிகப்பெரிய சர்ச்சையானது.

அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வரலாற்றுப் பண்பாடு பற்றி பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்று பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன் என விளக்கம் அளித்தார்.

13. தமிழ்நாடு சட்டபேரவையின் 16வது கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9ம் தேதி தொடங்கியது. அரசு தயாரித்து கொடுத்திருந்த உரையில், சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அமைதிப்பூங்கா முதலான பல்வேறு சொற்களை, ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கும்போது தவிர்த்தார்.

இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என தீர்மானத்தை வாசித்தார். இதனையடுத்து ஆளுநர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே அவர் அவையை விட்டு வெளியேறியதால் விதிமுறைகளை மீறியதாக சர்ச்சை எழுந்தது.

14. இப்படி எத்தனையோ சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, இன்று மீண்டும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திமுக தலைமையிலான, தமிழ்நாடு அரசு கூறி வரும் திராவிட மாடல் குறித்தும் விமர்சித்துள்ளார். அதில் “திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி. திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. அது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே. திராவிட மாடல் கொள்கைகள் ‘ஒரே நாடு, ஒரே பாரதம்’ கொள்கைக்கு எதிரானது. இந்த கொள்கை சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள், வரலாற்றை மறைக்க பார்க்கிறது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இப்படியான கருத்து மோதல் என்பது தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதற்கு இதுபோன்ற எத்தனையோ உதாரணங்கள் எடுத்து கூறப்பட்டாலும், ஆளுநர் உரைகளில் சர்ச்சையாக பேசுவதும், தமிழக அரசு அதற்கு பதிலடி தருவதும் என தொடர் கதையாகவே மாறியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முயற்சியிலும் இறங்கிய தமிழக அரசு, ஆளுநர் ரவியை திரும்ப பெறக்கோரி கூட்டணிக் கட்சிகளோடு தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.