குழந்தைகள் மீதான ஆன்லைன் சுரண்டலை தடுக்க வலியுறுத்தி சென்னையில் குழந்தைகள் மீதான இணையவழி பாலியல் சுரண்டலைத் தடுத்தல் (Preventing Online Child Sexual Exploitation) என்கிற செயல்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மீதான ஆன்லைன் சுரண்டலை தடுக்க வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தோழமை, TdH நெதர்லாந்து மற்றும் சில்ட்ரன் ஆஃப் இந்தியா பவுண்டேஷன் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்தின.
TdH நெதர்லாந்து அமைப்பு உலகளவில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக 18 நாடுகளில் செயல்படும் ஒரு சர்வதேச அமைப்பாகும். குழந்தைத் தொழிலாளர், குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், வணிகரீதியாக குழந்தைகளை பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்குதல் மற்றும் குழந்தை கடத்தல் உள்ளிட்ட குழந்தைகள் மீதான மோசமான சுரண்டல்களுக்கு எதிராக இந்த அமைப்பு பணியாற்றி வருகிறது.
சில்ட்ரன் ஆஃப் இந்தியா பவுண்டேஷன் (CIF) அமைப்பு குழந்தைகள் பாதுகாப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் கல்வி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் உரிமைகள், மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயல்பாடுகளுக்கான ஆதார மையமாக தோழமை அமைப்பு இயங்கி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் குழந்தை பாதுகாப்புத் திட்டங்களை ஒருங்கிணைக்கவும் அது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை TdH நெதர்லாந்து அமைப்புடன் இணைந்து இரண்டு அமைப்புகளும் நடத்தின.
இந்த நிகழ்ச்சியில் தோழமை அமைப்பின் இயக்குநர் தேவநேயன், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி, டெர்ரஸ் தேஸ் ஹோம்ஸ்-நெதர்லாந்தின் இயக்குநர் தங்கப்பெருமாள் பொன்பாண்டி, தமிழ்நாடு அரசின் மாதிரி பள்ளிகள் திட்டக் குழு செயலர் சுதன் ஐஏஎஸ், ஸ்டெல்லா மேரி கல்லூரியின் பேராசிரியர் லூர்து மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மீதான ஆன்லைன் சுரண்டலை தடுத்தல், , பியர் டு பியர் கற்றல் முறை வழியாக குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தல், ஆன்லைன் குற்றங்கள் குழந்தைகளிடம் ஏற்படுத்தும் மனநல பாதிப்புகளில் இருந்து அவர்களை மீட்டு வலுப்படுத்துதல், திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு எற்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் குழந்தைகள் மீதான இணையவழி பாலியல் சுரண்டலைத் தடுத்தல் (Preventing Online Child Sexual Exploitation) என்கிற செயல்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.







