காலநிலை அவசரநிலையை தமிழக அரசு பிரகடனம் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

சென்னையில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காலநிலை அவசரநிலையை தமிழக அரசு பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சென்னை பெசன்ட் நகர்…

சென்னையில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காலநிலை அவசரநிலையை தமிழக அரசு பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையில் பசுமை தாயகம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் சித்தார்த் கலந்து கொண்டனர்.

’வேண்டும் காலநிலை அவசர நிலை பிரகடனம்’என்ற பதாகைகளை ஏந்தியவாறு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சித்தார்த் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை பெசன்ட் நகரில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் அடையார் வழியாக
சென்று மீண்டும் பெசன்ட் நகரில் முடிவடைந்தது. பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ்,
”தமிழக அரசு இந்த காலநிலை மாற்றம் சம்பந்தமான பிரச்சனையை கையில் எடுக்க
வேண்டும். உடனடியாக காலநிலை அவசரநிலையை தமிழக அரசு பிரகடனம் செய்ய வேண்டும். சென்னை மட்டுமல்லாது தமிழகம் மட்டுமல்லாது உலக அளவில் இயற்கை சீற்றங்கள் அதிகமாக உள்ளன. காலநிலை மாற்றம் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் சித்தார்த், ”சென்னை ரன் என்ற மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. நம்மை காப்போம் அல்லது நமது உறவினரை காப்போம் எனக் கூறிக் கொண்டிருந்தோம். தற்போது அதை எல்லாம் விட்டுவிட்டு இந்த பூலோகத்தை காப்போம் என்ற நிலைமை வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.

இறுதியாக பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன், “இவ்வளவு கூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை. மழை  காலம் தொடங்கியுள்ளதால், நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இந்த நிலைமை, வரும் காலங்களில் நீடிக்க வாய்ப்புள்ளது. அதற்கு நாம் முன்னெடுப்புகளை கையில் எடுத்து பொதுமக்களை காக்க வேண்டும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.