முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

சோழ இளவரசர்களின் வழித்தடங்கள்- நிழலும், நிஜமும் (பாகம்-1)


எஸ்.இலட்சுமணன்

சோழர் காலத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளுடன் கற்பனையையும் கலந்து அமரர் கல்கியால் படைக்கப்பட்ட  வரலாற்று புனைவு புதினம் பொன்னியின் செல்வன். அந்த நாவலில் வாசகர்களை கவர்ந்த கதாபாத்திரங்கள் தற்போது செல்லுலாய்டு வடிவில் வெள்ளித் திரையில் நிழலாடுகின்றன.  பொன்னியின் செல்வனின் நாவல் மீண்டும் தமிழ்நாட்டில் பேசு பொருளாகியிருக்கிறது. அந்த நாவலில் சோழர் காலத்து வரலாற்று கதாபாத்திரங்கள் நிஜத்திலும் உலாவிய இடங்களாக கருதப்படும் சரித்திரப்புகழ் பெற்ற இடங்கள் குறித்து நியூஸ்7 தமிழில் பார்த்து வருகிறோம். ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரைகளில் பொன்னியன் செல்வன் நாவலில் முக்கிய கதாபாத்திரமாக வலம் வரும் வந்தியத்தேவன் சென்ற வழித்தடங்கள் குறித்து அலசினோம். சோழ இளவரசர்களான ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன் பயணித்ததாக பொன்னியின் செல்வனில் காட்டப்பட்டிருக்கும் இடங்கள் குறித்தும் அவ்விடங்களின் வரலாற்று பின்னணி குறித்தும் ”சோழ இளவரசர்களின் வழித்தடங்கள்- நிழலும் நிஜமும்” என்கிற புதிய பகுதியில் காண்போம்.

சதுப்பு நிலக்காடுகள்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வழக்கமாக ஒரு திரைப்படத்தில் இடைவேளையில் வைக்கப்படும் சஸ்பென்சிற்கு அடுத்த ஒரு மணிநேரத்தில் கிளைமாக்சில் விடை தெரிந்துவிடும். ஆனால் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று படத்தின் கிளைமாக்சே சஸ்பென்சாகத்தான் முடிந்துள்ளது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைப் படிக்காதவர்கள் இதற்கான விடையை அறிந்துகொள்ள இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். நடுக்கடலில் தீப் பிடித்து எரிந்த கப்பலில் இருந்து உயிர்தப்பும் இளவரசர் அருள்மொழிவர்மனும், வந்தியத் தேவனும், பூங்குழலியால் காப்பாற்றப்பட்டு கோடிக்கரைக்கு மேற்கே உள்ள ஒரு சதுப்பு நிலக்காட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவதாக பொன்னியின் செல்வன் நாவல் கதை செல்லும்.

கடலிலிருந்து பூமிக்குள் குடைந்து சென்ற கால்வாயில் பூங்குழலி படகை ஓட்டிச்சென்றால் என்கிற கல்கியின் வர்ணனையை பார்க்கும்போது அது தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடுகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகளான முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடுகள் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளை விட 10 மடங்கு பெரியது. திருவாரூரிலிருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவில் இந்த முத்துப்பேட்டை சதுப்புநிலக்காடுகள் உள்ளன.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக இந்த சதுப்புநிலக்காடுகள் தற்போது விளங்குகின்றன. இதன்  அருகே உள்ள மன்னாரம் தீவு பகுதியும் இளவரசர் அருள்மொழி வர்மனை காப்பாற்றும் தருணத்தில் பூங்குழலி கடந்து சென்ற பாதையாக இருக்கலாம் என்கிற ஒரு கருத்தும் நிலவுகிறது.

நாகப்பட்டினம்

பொன்னியின் செல்வன் நாவலில் அமரர் கல்கியால் அதிகம் வர்ணிக்கப்பட்ட இடங்களில் நாகப்பட்டினம் நகரமும் ஒன்று. இந்த நாவலில் வரும் சம்பவங்கள் நிகழ்வதாகக் கூறப்படும் 10ம் நூற்றாண்டில் அதவாது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகை தமிழ்நாட்டின் முக்கிய துறைமுகப்பட்டிணங்களில் ஒன்றாக விளங்கியுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து பெரிய பழுவேட்டரையர் சுங்கத் திறை வசூலிப்பை கண்காணிக்க வரும்போது, எத்தனை எத்தனையோ பொருட்கள் பெரிய பெரிய மரக்கலங்களில் நாகை துறைமுகத்தில் வந்து இறங்கிக்கொண்டிருந்தன என்று கல்கி வர்ணித்திருப்பார். முத்தும், மணியும், வைரமும், வாசணை திரவியங்களும் கப்பல்களில் வந்து இறங்கிய இடம் நாகை துறைமுகம் என்றும் நாவவில் கூறப்பட்டிருக்கும். 10ம் நூற்றாண்டில் மட்டுமல்ல அதற்கு 200 வருடங்களுக்கு முன்பாக 8ம் நூற்றாண்டிலேயே நாகப்பட்டினம் மிகப்பெரிய துறைமுக நகரமாக திகழ்ந்திருக்கிறது.

அந்த காலத்தில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடுவீதிக் கடல் நகரை காரோணாம் மேவியிருந்தீரே என நாகை நகரத்தின் பிரம்மாண்டத்தையும், எழிலையும் வர்ணித்துள்ளார்.  நாகை துறைமுகம் தற்போதும் ஆண்டுக்கு 10 லட்சம் டன்னுக்கு மேல் சரக்குகளை கையாளும் அளவிற்கு திகழ்கிறது. தமிழ்நாட்டில் கிடைக்கப்பெற்ற முக்கியமான வரலாற்றுப்பதிவுகளில் ஒன்றான ஆனைமங்கலச் செப்பேடு, பல கோவில்களும் சத்திரங்களும், நீர்நிலைகளும், சோலைகளும், மாட மாளிகைகளும் நிறைந்த, வீதிகளையுடைய நாகப்பட்டினம் என்று குறிப்பிடுகிறது. நாகப்பட்டினத்தில் தற்போது பிரசித்தி பெற்ற சிவதலமாக விளங்கும் காயாரோகணேஸ்வரர் ஆலயமும் பொன்னியின் செல்வன் நாவலில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் ஒன்றாக காட்டப்படுகிறது.

தேவாரம் பாடல் பெற்ற தலமான இந்த தலத்தில் உள்ள நந்தி மண்டபத்தில்தான் இலங்கையிலிருந்து திரும்பியபின் முதன் முறையாக தனது அக்கா குந்தவை பிராட்டியாரை இளவரசர் அருள்மொழிவர்மன் சந்திப்பார். அதிபத்த நாயனார் அதரித்த தலம் என்கிற பெருமையும் இந்த நாகப்பட்டினத்திற்கு உண்டு.

சூடாமணி விகாரை

தம்மிடம் வந்த மணிமகுடத்தை இருமுறை மறுத்த தியாகசீலராக போற்றப்படும் அருள்மொழிவர்மன், பின்னர் காலத்தின் கட்டாயமாக சோழ சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டார். இதற்காகவே காலம் அவரது உயிரை தற்காத்து வைத்திருந்ததுபோல் பல சந்தர்ப்பங்களில் அருள்மொழிவர்மன் மரணத்தின் வாயில்வரை சென்று உயிர் பிழைத்திருக்கிறார்.

இலங்கையில் அப்போது பரவியதாக கூறப்படும் விரு ஜூரம் அருள்மொழிவர்மனையும் தாக்கியிருக்கும். அந்த கொடிய குளிர்க்காய்ச்சலிலிருந்து அவர் உயிர்மீளும் இடம்தான் இந்த சூடாமணி விகாரம். இங்குள்ள புத்த பிட்சுகள்தான் இளவரசர் அருள்மொழிவர்மனுக்கு வைத்தியம் செய்து அவரது உயிரை மீட்பார்கள். நாகையில் தற்போதும் சோழர் காலத்து நினைவுகளை தாங்கியபடி இந்த சூடாமணி விகாரை காணப்படுகிறது. முன்பு இதில் நீதிமன்றம்  செயல்பட்டுவந்தது. ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாக கட்டடத்திற்கு நீதிமன்றம் மாறிய பின் சூடாமணி விகாரையை அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பின் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனோஷியாவை 7ம் நூற்றாண்டில் தொடங்கி ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தார்கள். அந்த வம்சத்தில் வந்த மகரத்துவன் சூடாமணி வர்மன், மிகவும் புகழ்பெற்ற அரசராக திகழ்ந்தார். அவரது மகன் மாற விஜயோத்துங்க வர்மன், தனது தந்தையின் நினைவாக நாகப்பட்டினத்தில் கட்டினதுதான் இந்த சூடாமணி புத்த விகாரை. அக்காலத்தில் நாகப்பட்டினத்திற்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையே கடல் வணிகத்தில் நெருங்கிய தொடர்பு இருந்த நிலையில், தங்கள் நாட்டிலிருந்து வருபவர்கள் வழிபடுவதற்காக சூடாமணி விகாரையை விஜயோத்துங்க வர்மன் கட்டியதாக கூறுகிறது. இந்த புத்த விகாரைக்கு சோழ மன்னர்கள் நிறைய நன்கொடைகளை அளித்துள்ளனர். இது குறித்து சூடாமணி ஆனைமங்கலச் செப்பேடுகளிலும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஆனைமங்கலம்

பிற்காலத்தில் ராஜராஜசோழன் என போற்றப்பட்ட பொன்னியின் செல்வரை கல்கி தனது நாவலில் பல இடங்களில் தர்ம சிந்தனை நிறைந்தவராக காட்டியிருப்பார். அப்படி ஆனைமங்கலத்திலும் நடக்கும் நிகழ்வுகளிலும் பொன்னியின் செல்வரின் கொடை உள்ளம் வெளிப்பட்டிருக்கும். சூடாமணி விகாரத்தில் குளிர்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பின்னர்,  ஆனைமங்கலத்தில் உள்ள சோழர்களின் அரண்மனைக்கு வந்து  அருள்மொழிவர்மர், அந்த அரண்மனையில் உள்ள தானியங்களையும், பொற்காசுக்களையும் மழைவெள்ளத்தாலும், புயலாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க உத்தரவிடுவார்.

நாகப்பட்டினத்திலிருந்து சுமார்  14 கிலோ மீட்டர் தொலைவில் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது இந்த ஆனைமங்கலம்.  தமிழ்நாட்டில் சரித்திரக்கால சான்றுகளை தன்னகத்தே வைத்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடுகள் உலகபுகழ் தொல்லியல் பதிவாக உள்ளது. ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் மற்றும் அவரது பேரனான குலோத்துங்க சோழன் காலங்களில் தாமிரப்பட்டைகளில் எழுதப்பட்ட இந்த செப்பேடுகள் சோழர்களின் வரலாற்று சாதனைகள் குறித்தும், அவர்கள் அளித்த தானங்கள்குறித்தும் எடுத்துரைக்கின்றன.

21 ஏடுகள் கொண்ட முதல் தொகுதி, 3 ஏடுகள் கொண்ட இரண்டாவது தொகுதியிலும் ராஜராஜசோழன் அளித்த தானங்கள் குறித்து அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சூடாமணி விகாரம் நாகையில் கட்டுவதற்காக மாற விஜயோத்துங்க வர்மனுக்கு ராஜராஜ சோழன் அளித்த நிலம் உள்ளிட்ட தானங்கள் குறித்தும் ஆனைமங்கலம் செப்பேடுகளில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின் லெய்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆனைமங்கலம் செப்பேடுகளை தமிழகம் மீட்டுக்கொண்டு வரவேண்டும் என நீண்டநாட்களாகவே கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரப்படுகிறது. ஆனைமங்கலம் என்கிற பெயரில் பொன்னியின் செல்வன் நாவலில் தனி அத்யாயமே உள்ளது.

சோழ இளவரசர்களான ஆதித்யகரிகாலன், அருள்மொழிவர்மன் பயணித்த இடங்களாக பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள   வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேறு சில இடங்கள் குறித்து அடுத்தக்கட்டுரையில் காண்போம்.

-எஸ்.இலட்சுமணன் 

 

 

 

 

 

 

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அல்லு அர்ஜுனுக்கு 160 வருட பழமையான துப்பாக்கியை பரிசளித்த தொழிலதிபர்

Halley Karthik

கொரோனோ தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

Niruban Chakkaaravarthi

நியூஸ் 7 தமிழ் எதிரொலி; சென்னை டுமீங்குப்பம் பகுதியில் மாற்று குடியிருப்புக்கள்

Arivazhagan Chinnasamy