காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில், புதன் கிழமை வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் பட்டியலிடப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் நீதிபதி கவாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வும் முன்பு முறையீடு செய்யப்பட்டது.
அதில், இன்றைக்கு காவிரி வழக்கு விசாரணை பட்டியலிடப்படவில்லை, எனவே திங்கட்கிழமையாவது வழக்கை விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கு நீதிபதி கவாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, திங்கட்கிழமை அரசியல் சாசன அமர்வு இருப்பதால், காவிரி வழக்க்கை விசாரிப்பது கடினம் எனக்கூறியது. அதோடு இவ்வழக்கு வரும் புதன்கிழமை விசாரிக்கப்படும். ஏனென்றால் நாங்கள் தான் ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடக அரசு சார்பில், கடந்த 28ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ஏற்று உரிய நீரை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. எனவே வழக்கை வேறு தினத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற அமர்வு, தற்போதைய காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு தொடரும் எனவும் ஆணையிட்டது.







