‘தளபதி 68’ திரைப்படத்திற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள விஎஃப்எக்ஸ் ஸ்டூடியோவில் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.
’தளபதி 68’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளார். நடிகர் விஜய்யுடன் நடிகை ஜோதிகா ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் அண்மையில் வெளியானது.
இந்த படத்தில் விஜய், அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும் மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ‘டாடா’ படத்தின் மூலம் பிரபலமடைந்த அபர்ணா தாஸ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகளை எடுப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கடந்த புதன்கிழமை அதிகாலை அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றடைந்தனர். அங்கு 3டி விஎஃப்எக்ஸ் ஸ்கான் தொழில்நுட்பத்தில் லுக் டெஸ்ட் எடுக்க திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிரபலமான லோலா விஎஃப்எக்ஸ் ஸ்டூடியோவுக்கு படக்குழுவுடன் விஜய் சென்றுள்ளார். அதற்கான புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு, ‘எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.
இதனால், ஒருவேளை இப்படம் அறிவியல் புனைவுக் கதையாக இருக்குமோ என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த விஎஃப்எக்ஸ் நிறுவனம் டீ-ஏஜிங் என்கிற நடிகர்களின் வயதைக் குறைத்துக்காட்டும் தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றது. இந்த தொழில்நுட்பம் இந்தியன் – 2 படத்தில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.







