தமிழக அரசு மாநிலத்திற்குள் விமானச் சேவைகளுக்காக திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விமான டர்பைன் எரிபொருள் (ATF) மீதான மதிப்புக்கூட்டு வரியைக் (VAT) குறைத்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமான எரிபொருளுக்கான மதிப்புக்கூட்டு வரி 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகவும், சென்னை தவிர மற்ற விமான நிலையங்களில் 29 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைத்துள்ளது.
அதன்படி 40,000 கிலோவுக்கும் குறைவான அதிகபட்ச புறப்படும் விமானங்களை இயக்கி, சென்னையை தவிர்த்து மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்களுக்கு, விமான டர்பைன் எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (VAT) அரசு 5%-லிருந்து 1%-ஆகக் குறைத்துள்ளது. இந்த வரிக் குறைப்பு நவம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த ஆண்டு (2027) அக்டோ பர் 31-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விமான எரிபொருள் மீதான வாட்(vat) வரியை குறைத்ததற்காக தமிழக அரசுக்கு விமான நிறுவனங்கள் நன்றி தெரிவித்துள்ளன. அதன்படி ஏர் இநடியா நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சென்னை விமான நிலையத்தில் வரியை 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகவும், மாநிலத்தின் பிற விமான நிலையங்களில் 1 சதவீதமாகவும் குறைத்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இது செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும், விமான இணைப்புகளை மேம்படுத்தவும் உதவும். நாங்கள் எங்களின் சேவையை மேலும் வலுப்படுத்தவும், தமிழ்நாட்டு மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கவும் இது உதவும்” என்று தெரிவித்துள்ளது.
அதேபோல இண்டிகொ நிறுவனம் கூறியிருப்பதாவது, “விமான எரிபொருள் (ATF) மீதான மதிப்புக்கூட்டு வரியைக் (VAT) குறைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்; இந்த முன்னெடுப்பிற்காக தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்; இத்தகைய நடவடிக்கைகள் விமான இணைப்பை வலுப்படுத்துவதுடன், மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன” என்று தெரிவித்துள்ளது.




