தமிழ்நாடு அரசு மக்களை மேலும் மேலும் பொருளாதார வீழ்ச்சியில் தள்ளுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை கணபதி புதூர் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பல்லடம் பகுதியில் விசைத்தறிகள் அதிகதாக இருக்கிறது. மின்கட்டணத்தை உயர்த்திய காரணத்தால் விசைத்தறி கூடங்களை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள விசைத்தறிகளுக்கு கூடுதலமாக இலவச மின்சாரத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கொரோனோவிற்கு பிறகு மேலும் மேலும் மக்களை மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் தமிழ்நாடு அரசு தள்ளி வருகிறது என குற்றம்சாட்டிய அன்புமணி ராமதாஸ், பண்டிகை காலமான இந்த நேரத்தில் ஆம்னி பேருந்து கட்டணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை உடனடியாக தமிழக அரசு குறைக்க வேண்டும் என்றார். திமுக வாக்குறுதியில் மாதந்தோறும் மின்கட்டணம் எடுப்போம் என்றனர். அதை அமல்படுத்தவில்லை எனவே அதை நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அத்திகடவு அவினாசி திட்டம் கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது. கடந்த 4 மாதங்களாக எந்த வேலையும் நடக்கவில்லை. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாண்டியாறு புன்னம்புழா, ஆனைமலை நல்லாறு திட்டம் ஆகியவை இந்த மக்களின் நீண்ட கால கோரிக்கை. கேரள அரசிடம் பேசி இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் நீர் பாசன திட்டங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
போதை பொருள் இளைய சமூகத்தை சீரழிக்கின்றது. கஞ்சா எண்ணெய், கஞ்சா சாக்லேட், கஞ்சா ஸ்டாம்ப் என அதிகரித்து வருவதோடு போதைபொருட்கள் சுலபமாக கிடைக்கிறது. இதற்கு முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் போதை ஒழிப்புதுறைக்கு இருபதாயிரம் காவலர்கள் நியமிக்க வேண்டும். இதை முக்கிய பிரச்சினையாக முதலமைச்சர் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, தூத்துகுடி சம்பவத்தில் காவல்துறை இந்த அறிக்கையை தவறாக எடுத்துகொள்ள கூடாது. இந்த அறிக்கை காவல் துறைக்கு ஒரு படிப்பினை எனவும் யாருக்கும் யாரையும் சாகடிக்க உரிமை இல்லை. இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. சரியான அணுகுமுறையை காவல் துறை கடைபிடிக்க வில்லை எனவும் தெரிவித்தார்.








