முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் நாளை தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது.

 

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18 (1967) ஆம் நாளையே தமிழ்நாடு திருநாளாக இனி கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா நாளை (திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது. ​

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இவ்விழாவில் மாநிலத் திட்டக் குழு, துணைத் தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில், கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்தக் கருத்தரங்கில், சமூக நீதி கண்காணிப்பு (ம) பாதுகாப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், “தமிழ்நாடு உருவான வரலாறு”, ஆழி செந்தில்நாதன், “மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும்”, வாலாசா வல்லவன், “தமிழகத்துக்காக உயிர் கொடுத்த தியாகிகள்”, முனைவர் ம. இராசேந்திரன், “தாய்நாட்டுக்குப் பெயர் சூட்டிய தனயன்”, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், “முத்தமிழறிஞர் கருணாநிதி உருவாக்கிய நவீன தமிழ்நாடு” ஆகிய தலைப்புகளில் கருத்துரையாற்றுகிறார்கள்.

 

​கலைவாணர் அரங்கத்தில் தொல்லியல் துறை சார்பாக அமைக்கப்படும் தொல்பொருட்கள் கண்காட்சியில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அரியவகை தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

 

மேலும், தமிழ்நாடு நில அளவைத் துறை சார்பில் சென்னை மாகாணத்தின் பழைய மற்றும் தற்போது வரையிலான ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
​இவ்விழாவினையொட்டி, சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் ஒடிசாவைச் சேர்ந்த புகழ்மிக்க மணற்சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக் தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பமும் உருவாக்கப்படுகிறது.

 

கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு மணற்சிற்பம் உருவாக்கப்படும் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, செம்மொழிப் பூங்கா மற்றும் சென்டரல் சதுக்கம் ஆகிய 4 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடத்தப்படுகிறது.

இத்துறை சார்பில் தமிழ்நாட்டில் கோவை, மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வாயிலாகவும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கரூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், சீர்காழி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 20 இடங்களில் அரசு இசைப் பள்ளி வாயிலாகவும், இயல், இசை, நாட்டியம் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளோடு தமிழ்நாடு நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

 

சென்னை காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் எதிரில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பம் மற்றும் கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கண்காட்சி ஆகியவை நாளை ( 18.07.2022) முதல் 20.07.2022 வரை மூன்று நாட்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. இக்கண்காட்சிகளை பெருந்திரளான பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குஜராத் பிளேயிங் லெவன்: விளையாடப்போகும் வீரர்கள் யார்? யார்?

ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த்

Halley Karthik

இந்தியாவின் மருத்துவத் தலைமையகமாக உள்ளது சென்னை – கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

Web Editor