டெல்லியில், பிரதமரைச் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து, பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் இரவு தங்கினார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
அப்போது புதிய துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ளதற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள துணை குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 11.30 மணிக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
https://twitter.com/PMOIndia/status/1559865929374306305
அதன்பின்னர் டெல்லியிலுள்ள அமைந்துள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவரையும் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இருவரும் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்துப் பேசினோம். இந்த சந்திப்பு மனநிறைவாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்குப் பிரதமரைச் சந்திக்கவுள்ளேன். செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைத்ததற்கு நன்றி தெரிவிக்க உள்ளேன். மேலும் பிரதமரைச் சந்திக்கும் போது நீட் தேர்வு , புதிய கல்விக் கொள்கை, காவிரி பிரச்சனை, மேகதாது உள்ளிட்டவை குறித்து கோரிக்கை உள்ளேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, பிரதமர் மோடியைச் சந்திக்க டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்திலிருந்து கிளம்பிய அவர், பிரதமர் இல்லம் சென்று அங்குப் பிரதமரைச் சந்தித்து தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்து, செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைத்ததற்கு நன்றி தெரிவித்துவிட்டு தமிழ்நாடு திரும்ப டெல்லி விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார். இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் பாரம்பரிய தானிய வகைகளை நினைவுப் பரிசாகப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதில், கேழ்வரகு, கம்பு, மாப்பிள்ளைச் சம்பா உள்படத் தமிழ்நாட்டின் பாரம்பரிய தானிய வகைகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.








