தமிழகத்தில் 2500 பள்ளிகளில் மரத்தடியில் மாணவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலை உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் என 6 மாவட்டங்களை உள்ளடக்கிய கல்வித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ரகுபதி, எஸ்.எஸ்சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தமிழ்நாட்டில் 2,500 பள்ளி மாணவர்கள் மரத்தடியில் கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய புதிய கட்டடங்கள், வகுப்பறைகள் அமைக்க நிதி கேட்கப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் பணிகள் துவங்கும். 2500 புதிய ஆசிரியர்கள் விரைவில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
கல்வி தொலைக்காட்சி குறித்த கேள்விக்கு, ’அன்பில் பேரனுக்கு வந்த கொடுமை இது. கல்வி தொலைக்காட்சியின் இரண்டாவது அலைவரிசை துவங்குவதற்கு முறையாக அதற்கு கமிட்டிகள் அமைக்கப்பட்டு அவர்களை மட்டுமே தேர்வு செய்தனர். கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமனம் குறித்து சர்ச்சைகள் வருவதால் அதனை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளேன். தமிழக முதல்வர் குறிப்பிட்டதை போல் எதிலும் சமரசம் இல்லை. அவருடைய வளர்ப்பு நான். இதை நான் பாசிட்டிவாக எடுத்துக் கொள்கிறேன்’ என்றார்.







