முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக சட்டமன்றத்தை அலங்கரித்த சபாநாயகர்கள்!

16 வது சட்டப்பேரவையின் அவைத்தலைவராக அப்பாவுவும், துணைத் தலைவராக கு.பிச்சாண்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் திருக்குறள் சொல்லி அவை நடவடிக்கையை ஆரம்பித்தவர், பேரவைத் தலைவருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது என உரக்கக் கூவியவர். நாவான்மையாலும், இலக்கிய அறிவாலும் அவையை கட்டிப்போட்டவர், என மாண்புமிக்க அரசியல்வாதிகள் தமிழ்நாடு சட்டப்பேரவையை அலங்கரித்துள்ளனர் அதைப்பற்றி பார்ப்போம்.


நாடு விடுதலை அடைந்த போதும்,விடுதலைக்கு பிறகு நடைபெற்ற முதல் பொது தேர்தலுக்கு பிறகும், ஒருங்கிணைந்த சென்னை மாகாண, சட்டப்பேரவையின் தலைவராக இருந்தவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜே.சிவசண்முகம் பிள்ளை, மொழிவாரியாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பும், தமிழ்நாடு மாநில (சென்னை மாநிலம்) சட்டப்பேரவையின் பேரவைத்தலைவராக தொடர்ந்தார் . சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் சிவ சண்முக பிள்ளை. தேர்ந்த நிர்வாகியான இவர் மத்திய பணியாளர் தேர்வாணையத்திலும் பொறுப்பு வகித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1946 – 55 வரை பேரவைத்தலைவராக இருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கோபால மேனன்


சிறு வயதிலே கோழிக்கோட்டிலிருந்து சென்னைக்கு புலம் பெயர்ந்த கோபால மேனன் , சென்னை கிறித்துவ கல்லூரியில் பட்டப்படிப்பையும், சென்னை சட்டக்கல்லூரியிலும் சட்டமும் படித்தார். தலை சிறந்த சட்ட நிபுணர்களிடம் சட்டம் பழகியவர். சென்னை மாநகராட்சியின் நிர்வாகம் மற்றும் நிதியியல் ஆலோசகராக பல ஆண்டுகள் இருந்தவர். காங்கிரஸ் கட்சி சார்பில் மலபார் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாவது பேரவைத்தலைவராக 1955 – 56 ஆம் ஆண்டுகளில் பதவி வகித்தவர் கோபால மேனன்.

யு.கிருஷ்ணாராவ்
மருத்துவ குடுமபத்தில் பிறந்த கிருஷ்ணா ராவ், தன் தந்தை ராமா ராவ் வழியில் அரசியலிலும் , பொது மக்கள் சேவையிலும் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். சென்னை மாநகர மேயராகவும், ராஜாஜி தலைமையிலான அமைச்சரவையிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3 வது பேரவைத்தலைவராக 1957 ஆம் ஆண்டு முதல் 1961 வரை இருந்தார்.

எஸ்.செல்லப்பாண்டியன்


விடுதலைப்போராட்ட வீரரும் , தலை சிறந்த சட்ட நிபுணருமான எஸ்.செல்லப்பாண்டியன் ,திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். சேரன்மாதேவியில் தொகுதியிலிருந்து வென்றவர். பெருந்தலைவர் காமராஜரின் நெருங்கிய நண்பர் . மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகிய அரசியல் ஆளுமைகள் , செல்லப்பாண்டியனிடம் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றினர். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர். . 1962 முதல் 67 ஆம் ஆண்டு வரை பேரவைத்தலைவராக இருந்தார்.

சி.பா. ஆதித்தனார்


ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சிபா ஆதித்தனார் , அந்த காலத்திலேயே வெளிநாடு சென்று சட்டம் பயின்றவர், மலேசியா,சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான வழக்கறிஞராக இருந்தார்… பிறகு தமிழ்நாடு திரும்பிய இவர் தன்னை அரசியல் பணியிலும், சமூக பணியிலும் ஈடுபடுத்தி கொண்டார். தமிழ் பத்திரிக்கை உலகில் பல வகைகளில் மறுமலர்ச்சியை புகுத்தியவர். 1967 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் , இவரது நாம் தமிழர் கட்சி கூட்டணி வைத்தது. 1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையின் பேரவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலத்தில் தான் , பேரவை தொடங்கும் போது நாள் தோறும் ஒரு திருக்குறளை உரைத்து , அதற்கான பொருளையும் சொல்லும் வழக்கம் ஆரம்பமானது.. நெல்லையைச்சேர்ந்த இரண்டாவது பேரவைத்தலைவர். தமிழ் மொழி தெரியாதவர்கள் மட்டுமே பிற மொழியிலோ / ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற விதியை உருவாக்கியவர்.

புலவர் கே கோவிந்தன்


சிறு வயது முதல் தனித்தமிழ் இயக்கத்திலும் , நீதிக்கட்சியிலும் , பிறகு திமுகவிலும் ஈடுபாடு கொண்ட அரசியல்வாதி புலவர் கோவிந்தன்.
முதல்வராக இருந்த அண்ணாவின், மறைவையடுத்து. மு.கருணாநிதி முதல்வரானார். கருணாநிதி அமைச்சரவையில் சி.பா.ஆதித்தனார் இடம் பெற்றதால் ,1969 – 71 ஆம் ஆண்டுகளில் புலவர் கோவிந்தன் பேரவைத்தலைவரானார். 1971 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பேரவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட , கே,ஏ.மதியழகன் , எம்ஜிஆர் திமுகவை விட்டு விலகிய போது,எம்ஜிஆரின் குரலுக்கு செவிசாய்த்ததால் கருணாநிதியின் கோபத்திற்கு ஆளானார் கே.ஏ.மதியழகன். சர்ச்சைகள் அதிகமானதால் பேரவைத்தலைவர் பதவியை விட்டு விலகினார் மதியழகன். அதையடுத்து மீண்டும் சட்டப்பேரவைத்தலைவராக 1973 -77 ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார். ஆசிரியர்,எழுத்தாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி என பன்முகத்தன்மையில் பயணித்தவர்.

கே.ஏ.மதியழகன்


திராவிடப் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்தவர் , திமுக வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர்.நாவன்மை மிக்க பேச்சாளர் . திமுக வின் வளர்ச்சியில் பங்கெடுத்து கொண்டு , அண்ணாவுக்கு துணை நின்றவர் கே.ஏ.மதியழகன் . அதே போல் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த போது அவருக்கு பக்க பலமாக இருந்தார் .1967 ல் அமைந்த அறிஞர் அண்ணாவின் தலைமையிலான திமுக அரசில் அமைச்சராக பொறுப்பு வகித்தார் , 1971 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் பேரவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .கே.ஏ மதியழகன் , 1972 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பேரவைக்கூட்டத்தில் , எம்ஜிஆர் குரலுக்கும் மதிப்பளித்தார்.அதனால் ஆளும்கட்சியான திமுக , பேரவை துணைத்தலைவராக இருந்த விருதுநகர் பெ,சீனிவாசனை வைத்து அவையை நடத்தியதால் அவையில் கூச்சலும் குழப்பமும் நடந்தேறின. பிறகு பேரவைத்தலைவர் பதவியை விட்டு விலகினார் . குறுகிய காலம் மட்டுமே 1971 – 72 ஆண்டுகளில் பேரவைத்தலைவராக பதவி வகித்தார்.

முனு ஆதி


ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் சோசலிஸ்டு கட்சியில் சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச்சென்றார். சிறையில் அண்ணாவைச் சந்தித்தார். பிறகு திமுகவில் இணைந்தார். 1977 ஆண்டு எம்ஜிஆர் தலைமையில் அதிமுக ஆட்சியமைத்த போது பேரவைத்தலைவராக இருந்து அவையை சிறப்பாக நடத்தியவர் முனு ஆதி .

கே.ராஜாராம்
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த க. ராஜாராம் , தந்தை பெரியாரின் செயலாளராக இருந்தவர். அண்ணாவுக்கு உதவியாகவும் இருந்தவர்.அண்ணா மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போது க.ராஜாராமும் உடன் சென்றார். மக்களவை உறுப்பினர், சட்டப்பேரவை தலைவர் , மாநில அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்தவர் ராஜாராம். . 1980 ம் ஆண்டு அதிமுகவின் இரண்டாம் ஆட்சியில் அவைத்தலைவராக இருந்தார். அரசியல் சட்டத்தை எரித்த சர்ச்சையில் பேராசிரியர் அன்பழகன் உட்பட , திமுக உறுப்பினர்கள் 9 பேரின் எம்.எல்.ஏ பதவிகளை பறித்தார் அவைத்தலைவர் ராஜாராம்.

பி.எச். பாண்டியன்


திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். சிறந்த வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் அதிமுகவின் மூன்றாவது ஆட்சியின் போது பேரவைத்தலைவராக இருந்தார். அவைத்தலைவருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. என பேசியவர். அவையின் நடவடிக்கையை விமர்சித்தவர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களுக்கு தண்டனை விதித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பேரவையின் மாண்புகளை குலைக்கும் வகையில் விகடன் , வணிகர் ஒற்றுமை ,முரசொலி செயல்படுகிறது என சொல்லி அப்பத்திரிக்கைகளுக்கு சம்மன் அனுப்பி , தண்டனை வழங்கியவர்.நெல்லையைச்சேர்ந்த மூன்றாவது பேரவைத்தலைவர் பி.எச்.பாண்டியன் .

தமிழ்குடிமகன்


மதுரை யாதவா கல்லூரி விழாவுக்கு, சிறப்பு விருந்தினராக வருகை தந்தார் திமுக தலைவர் கருணாநிதி. யாதவா கல்லூரியின் முதல்வராக இருந்த பேராசிரியர் தமிழ்க்குடிமகனின் வரவேற்புரையில் இலக்கிய அறிவும், செந்தமிழ் நடையும் , முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து 1989 ஆம் ஆண்டு நடைப்பெற்ற , சட்டப்பேரவை தேர்தலில் வென்று உறுப்பினராகி சட்டப்பேரவை தலைவராக பொறுப்பேற்று , அவையை சிறப்பாக நடத்தியவர் பேராசிரியர் தமிழ்க்குடிமகன். இவர் அவையை சிறப்பாக நடத்தியதால் அடுத்த முறை அமைந்த திமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சி துறை தனியாக உருவாக்கப்பட்டு அத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்ட பெருமையுடையவர்.

சேடப்பட்டி முத்தையா


அண்ணாவின் காலத்தில் , திமுக மாணவரணி செயலாளர் தேர்தலில் வென்றவர்.இவர் தோற்கடித்தது கருணாநிதியின் சீடர் துரைமுருகனை. எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த போது அதிமுகவில் இணைந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 ல் ஜெயலலிதா முதல் முறையாக ஆட்சி அமைத்த போது , பேரவைத்தலைவராக இருந்தார். திமுக கட்சியின் முரசொலி நாளிதழ் ,அரசுக்கு எதிராக செயல்படுகிறது என கூறி முரசொலி நிர்வாகி. முரசொலி செல்வத்திற்கு நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் சேடப்பட்டி முத்தையா.

பிடிஆர் பழனி வேல் ராஜன்

பாரம்பரியம் மிக்க நீதிக்கட்சி தலைவரும், சென்னை மாகாண முன்னாள் முதல்வருமான பிடிராஜனின் மகனான பிடிஆர் பழனிவேல் ராஜன் 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த போது , பேரவைத்தலைவரானார். அப்போது , மிகவும் நடு நிலையுடன் செயல்பட்டார். அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.

((அதிமுக எம்.எல்.ஏ தாமரைக்கனி , வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துடனான ,விவாதத்தில் , வார்த்தைகள் மோதலானது. அமைச்சர் வீரபாண்டி மூக்கின் மீது, தன் கைவிரலில் அணிந்திருந்த பெரிய மோதிரத்தால் ஓங்கி , குத்தினார். அமைச்சருக்கு ரத்த காயம் உண்டானது . தாமரைக்கனியின் பதவியை பறிக்க வேண்டும், நீண்ட நாட்கள் நீக்க வேண்டும் என்றெல்லாம், திமுக உறுப்பினர்களும், அமைச்சர்களும், குரல் கொடுத்தனர். ஆனால் அவைத்தலைவராக இருந்த பேரவைத்தலைவர் பிடிஆர் பழனிவேல் ராஜன், ஓரிரு நாட்கள் மட்டுமே அவையை விட்டு விலக்கினார். எந்த சூழலிலும் சட்டப்பேரவை ஜனநாயகம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் திடமாக இருந்தார் பழனிவேல்ராஜன்.

காளிமுத்து
இலக்கிய பேச்சாற்றலால் அனைவரையும் தன் பக்கம் ஈர்க்கும் வல்லமை கொண்ட இலக்கிய ஆளுமை காளிமுத்து, அண்ணா,கருணாநிதி,எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என நான்கு முதல்வர்கள் ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக ,அமைச்சராக பணியாற்றியவர். 2001 ல் அதிமுக ஆட்சியின் போது சட்டப்பேரவை தலைவராக இருந்த போது இலக்கிய நயத்துடன் அவையை நடத்தினார். அவை செயல்பாடுகளை வரையறை மீறி விமர்சித்ததாக கூறி ் இந்து நாளிதழுக்கு சம்மன் அனுப்பி பரபரப்பு ஏற்படுத்தியவர்.

ஆவுடையப்பன்


மூத்த திமுக உறுப்பினர். வழக்கறிஞர். 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அவைத்தலைவராக இருந்தார். மாவட்ட திமுக முன்னோடி . திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர்.நெல்லையைச் சேர்ந்த நான்காவது பேரவைத்தலைவர்.

ஜெயக்குமார்


தந்தை துரைராஜ் சென்னை மாநகராட்சி உறுப்பினர். கருணாநிதியின் முரட்டு தொண்டர். ஆனால் அவர் மகன் ஜெயக்குமார் அதிமுகவில் இணைந்தார். 1991, 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைத்த அதிமுக ஆட்சிகளின் போது, அமைச்சராக இருந்தவர். 2011 ல் அதிமுக ஆட்சி அமைத்த போது . பேரவைத்தலைவராக இருந்தார், சில சர்ச்சைகளால் கே.ஏ.மதியழகனைப்போல் குறுகிய காலம் மட்டுமே பேரவைத்தலைவராக இருந்தவர் ஜெயக்குமார்.

ப.தனபால்
எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி, ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த போது, பேரவைத்துணைத்தலைவராக பதவி வகித்தார். சர்ச்சைகளால் ஜெயக்குமார் ,பேரவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால் , தனபால் பேரவை தலைவரானார். அடுத்த அமைந்த புதிய அரசிலும் பேரவைத்தலைவராக தொடர்ந்தார். சிவ சண்முகம் பிள்ளை, புலவர் கோவிந்தனை தொடர்ந்து இரண்டு முறை பேரவைத்தலைவராக இருந்தவர் தனபால் , முதலமைசராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு எதிராக பேரவையில் வாக்களித்த ஓ.பன்னீர் செலவம் அணியின் 12 எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்காமல் விட்டு விட்டார். முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரை சந்தித்ததற்காகவே 18 அதிமுக எம்.எல்.ஏக்களின் பதவியை பறித்த சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் தனபால் .

அப்பாவு
முகஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை பதவியேற்ற 16 வது சட்டப்பேரவையின் பேரவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்பாவு, திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர். ராதாபுரம் தொகுதியில் தமாகா, சுயேச்சை, திமுக என அரசியல் பயணத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் , வென்று வருபவர் . தொகுதி மக்களுக்கு குரல் கொடுப்பவர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் , தாமிரபரணி ஆற்று நீரை கொககோலா, பெப்சி நிறுவனங்கள் உறிஞ்சுவதை எதிர்த்து நீதி மன்றம் வரை சென்றவர். நெல்லையைச் சேர்ந்தவர் ஐந்தாவது பேரவைத்தலைவர் என்ற சிறப்பை பெறுகிறார்.

அதே போல் பேரவை துனைத்தலைவராக திருவண்ணாமலை மாவட்டம் , கீழ் பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற முன்னாள் அமைச்சர் கு பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார் .. திமுக சார்பில் 6 முறை சட்டசபைக்கு தேர்வாகியுள்ளார்.

அப்பாவு மட்டுமின்றி, திருநெல்வேலியில் இருந்து, செல்லபாண்டியன், சி.பா. ஆதித்தனார், பி.எச். பாண்டியன், ஆவுடையப்பன் என 5 பேர் சட்டப்பேரவைத் தலைவர் பதவியை அலங்கரித்துள்ளனர். இவர்களுடன், தென் மாவட்டங்கள் என்று பார்க்கும் போது, சேடப்பட்டி முத்தையா, பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், காளிமுத்து ஆகியோரும் பேரவைத் தலைவர் பதவியில், திறம்பட செயலாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முட்டை விலை உயர்வுக்கு காரணம் என்ன? தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் விளக்கம்

Web Editor

“என்னை விலைக்கு வாங்க நினைத்தார்கள்” – பரப்புரையில் கமல் பேச்சு

G SaravanaKumar

அக்னிபாத் திட்டம் – விமானப்படைக்கு ஏழரை லட்சம் பேர் விண்ணப்பம்

Web Editor