எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றும் விவகாரம் – சபாநாயகர் கூறியது இதுதான்?

எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றும் விவகாரத்தில் ஒருதலைபட்சம் இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தொழிலாளர் நல வாரியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றும் விவகாரத்தில் ஒருதலைபட்சம் இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தொழிலாளர் நல வாரியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்துப் பேசிய அவர், அதிமுகவின் சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி அவர்கள் இன்று கொடுத்த கடிதமும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கிய கடிதமும் பரிசீலணையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் என்ற முறையில் ஜனநாயக முறைப்படி சட்டப்படி, விதிப்படி நியாயமாக ஒருதலைபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த முடிவாக இருந்தாலும் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் உட்பட்டபடி அமையும். தனிப்பட்ட முறையில் யார் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உட்பட அதிமுகவினர் அனைவரும் இரட்டை இலையில் இருந்து வெற்றி பெற்று வந்தவர்கள். மற்றபடி அனைத்தும் அவர்களது கட்சியின் உள் விவகாரம்.

துணைத் தலைவர் பதவி என்ன காரணத்திற்காக மாற்றப்பட்டுள்ளது என்பதை அவர்களது கடிதத்தின் மூலம் படித்து பார்த்து சட்ட விதி என்ன கூறுகிறது என்று பார்க்க வேண்டும். வழக்கறிஞர் உள்ளிட்டவர்களுடன் ஆய்வு செய்து எதிர்க்கட்சி கொறடா வேலுமணி கொடுத்த கடிதம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.